உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூஜையுடன் கைவிடப்பட்ட மோகன்லாலின் 'ஆபரேஷன் ராஹத் ': இயக்குனர் மேஜர் ரவி தகவல்.

பூஜையுடன் கைவிடப்பட்ட மோகன்லாலின் 'ஆபரேஷன் ராஹத் ': இயக்குனர் மேஜர் ரவி தகவல்.

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவப் பின்னணியில் படங்களை இயக்கி வந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், இயக்குனருமான மேஜர் ரவி. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் நடிப்பில், ராணுவ பின்னணியில் 'ஆபரேஷன் ராஹத்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் மேஜர் ரவி.

இதுபற்றி அவர் கூறும்போது, இந்த படம் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தில் அக்ஷய் குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளே நுழைக்கத் திட்டமிட்டனர். என்னுடைய அனுமதியின்றியே இது நடைபெற்று, கிட்டத்தட்ட 200-ல் இருந்து 230 கோடி பட்ஜெட் வரை திட்டமிடப்பட்டது. குறிப்பாக, அக்ஷய் குமாருக்கு 80 கோடி சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

30 கோடியில் திட்டமிட்ட படத்திற்கு 230 கோடி ரூபாய் செலவிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதாலும், வணிக ரீதியாக சரியான முடிவாக இருக்காது என்பதாலும் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டேன் என்று கூறியுள்ளார் மேஜர் ரவி. இந்த படம் கைவிடப்பட்டது என அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும் இந்த படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகிக் கொண்டதாக உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் மேஜர் ரவி - மோகன்லால் கூட்டணியில் ஒரு ராணுவப் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !