முதல்நாள் வசூலில் சாதனை படைக்குமா தமிழக முதல்வரின் ‛ஜனநாயகன்'
தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஜூலை 24ல் வெளியாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அன்றைய தினம் படத்தை வரவேற்க பெரியளவிலான ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 750க்கும் அதிகமான தியேட்டரில் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கிறது. உலகம் முழுக்க சில ஆயிரம் திரைகளில் வெளியாகலாம்.
பொதுவாக விஜய் படங்களுக்கு குழந்தைகள் அதிகம் வருவார்கள், கொண்டாடுவார்கள். ஆனால், இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் 18வயதுக்கு உட்பட்டவர்கள் வர முடியாத நிலை. அதனால், அதை யு.ஏ ஆக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா அல்லது வேறு வகை சான்றிதழ் வாங்கலாமா என்றும் படக்குழு யோசிக்கிறதாம். அதேசமயம் அதற்கு இன்னும் தாமதம் ஆகிவிட்டால் ரிஸ்க் என நினைக்கிறார்களாம்.
தமிழக முதல்வர் ஆனபின் வரும் படம், அவரின் கடைசி படம் என்பதால் ஜனநாயகன் படம் பலவகைகளில் சாதனை படைக்க வேண்டும். குறிப்பாக, வசூலில் புது ரெக்கார்டு வைக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவில் முதல் நாள் வசூலில் புது சாதனை படைக்க வேண்டும் என்றும் படக்குழுவினர், தவெகவினர், விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்களாம். அதை நடத்தி காண்பிக்க இப்போதே வேலைகள் தொடங்கி உள்ளன.
உலக அளவிலும் முதல் நாள் வசூலில் புது சாதனையை முதலில் படைக்க வேண்டும். அதற்கேற்ப டிக்கெட் விற்பனை, தியேட்டர் எண்ணிக்கை, ஷோ எண்ணிக்கை இருக்க வேண்டும் என்று நினைத்து சில திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்களாம், தவெக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்வர்கள் என பலர் தலைமையில் இதை நடத்தப் போகிறார்களாம். எப்படியும் ஜூலை 24ல் 5 காட்சிகள் இருக்கும். அதற்கேற்ப பிளான் பண்ணி, மறுநாள் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த முதல் தமிழ் படம் என்று விளம்பரம் செய்ய, அறிவிப்பு வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
இதுவரை வந்த தமிழ் படங்களில் உலக அளவில் லியோ முதல்நாளில் 140 கோடிவரையும், கோட் 126 கோடிவரையும் வசூலித்துள்ளது. ரஜினியின் கூலி படம் 151 கோடி வசூலித்தது. தற்போது தமிழ் படத்தில் இந்த படம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் ரூ. 38 கோடி, லியோ - ரூ. 36.5 கோடி, தி கோட் 31.5 கோடி வசூலித்து இருக்கும் நிலையில், ஜனநாயகன் வசூல் தமிழகத்தில் மட்டும் 50 கோடியை தொட வேண்டும் என்றும் நினைக்கிறார்களாம். அதனால், கூலி படத்தின் சாதனையை ஜனநாயகன் முறியடிக்க வேண்டும் என ஜனநாயகன் குழு நினைக்கிறதாம். அதனால், ஜனநாயகன் முதல் நாள் டிக்கெட் விலை, முதல் ஷோ டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.