ராசி அழகப்பன் இயக்கும் ‛ஆண்ட'
மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'வண்ணத்துப்பூச்சி' சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். எழுத்தாளர்-இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 'குரங்கு பெடல்' திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்போது 3வது படைப்பாக இந்த நிறுவனம் ஆண்ட திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார்.
ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு “லைப் டைம் ஸ்டோரி”யாக 'ஆண்ட' உருவாகிறது. இதில் இடம்பெறும் தட்சணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையமாக அமைகிறது.
வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகள் மாறக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது. இதில் புதுமுகங்களே நடிக்க உள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் வெளிநாடுகளின் படப்பிடிப்பு நடக்கிறது.