நடிகை கடத்தல் வழக்கு: முதன்மை குற்றவாளியின் தண்டனை நிறுத்தி வைக்க கோரிய மனு தள்ளுபடி
கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது, காரில் வைத்து அதன் டிரைவர் மற்றும் சிலரின் மூலமாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அவை வீடியோவாகவும் படம்பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியாக பல்சர் சுனி உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு, கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர்களுக்கு 20 வருட சிறையும், 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே எட்டு ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டதால், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பல்சர் சுனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்தக் குற்றம் மிகவும் கொடூரமானது என்றும், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், அதுமட்டுமல்லாமல் குற்றவாளியின் மீது ஏற்கனவே 11க்கும் மேற்பட்ட தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன, அவர் ஜாமினில் இருந்தபோது கூட மற்றொரு குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறி அவரது கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தது.