ஒருநாள் பிரசாரம் டூ அரசியல்வாதி: ரோஜா பகிர்ந்த புது தகவல்
'ஜமா' படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன், அடுத்ததாக 'அன்பே டயானா' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 17 ரிலீஸ் ஆகிறது. பாரி இளவழகன் ஜோடியாக, நீக் (NEEK) பட ஹீரோயின் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். வட சென்னை பின்னணியில் நடக்கும் கதையாக, ஒரு இளைஞன், ஆங்கிலோ இந்தியன் பெண் ஆகியோருக்கு இடையேயான காதல், கலகலப்புடன் கூடிய இப்படத்தில் நாயகனின் அம்மாவாக நடிகை ரோஜா நடித்துள்ளார்.
'அன்பே டயானா' படம் சார்ந்த பத்திரியாளர்கள் சந்திப்பில் நடிகை ரோஜா கூறியதாவது: இந்த படத்தில் இரு மகன், ஒரு மகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். சில காட்சிகள் ரியலிஸ்டிக்காக வந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் நடித்திருந்தாலும், இந்த கதாபாத்திரத்தில் கஷ்டப்பட்டு எல்லாம் நடிக்கவில்லை, என்ஜாய் செய்து நடித்தேன். நான் முன்பே விஜய் உடன் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன். அப்போது விஜய், உண்மையிலேயே நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா என ஆச்சரியமாக கேட்டார். அப்போது ஏதோ தப்பு பண்ணிட்டோமோ என எண்ணி, அம்மாவாக நடிப்பதை நிறுத்திவிட்டேன். பின்னர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றேன்.
மீண்டும் நடிப்பு
'லெனின் பாண்டியன்' படத்தின் கதையை கேட்ட பிறகே மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்தேன். அதன்பிறகு, இயக்குனர் பாரி இளவழகன் இந்த 'அன்பே டயானா' கதை சொன்னார். என்னை மனதில் வைத்து அவர் கதை எழுதியாக சொன்னார். அந்த கதாபாத்திரம் என்னை பார்ப்பது போலவே இருந்தது. தெலுங்கு பேசும் ஒருவர் தமிழகத்தில் செட்டில் ஆனது போன்ற கதையால் எனக்கு செட் ஆகிவிட்டது. அதனால் இதிலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அரசியல்
சினிமாவில் ஜாலியாக வந்து நடித்து செல்வோம். ஆனால் அரசியலில் அப்படியில்லை. சினிமா ஆட்கள் என்றாலே அரசியலில் பொறாமை இருக்கும். நாங்கள் பிரசாரத்திற்கு வந்தால் சந்தோஷப்படும் அரசியல்வாதிகள், அதே சினிமாக்காரர்கள் போட்டியாளராக வந்தால் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அந்த ஒருவரை டார்கெட் செய்வார்கள். நானும் அந்த அனுபவத்தை பெற்றுள்ளேன். தமிழக அரசியலிலும் அந்த மாதிரிதான் ஆனது.
ஒருநாள் பிரசாரம்
தமிழக அரசியலில் திமுக, அதிமுக பழம்பெரும் கட்சியாக இருந்தாலும், விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த 5 ஆண்டுகளும் அவர் சொன்னதை செய்தால் 100 சதவீதம் அவருக்கு எதிர்காலம் உள்ளது. சினிமா, அரசியல் என இரண்டிலும் எனக்கு வாய்ப்பு வந்தது. நான் சினிமாவிற்கு வரும்போது நடனம், நடிப்பு எதுவும் தெரியாமல், வந்தபிறகு கற்றுக்கொண்டேன். அதேபோல், அரசியல் வாய்ப்பு, எனது தந்தையின் நண்பர் மூலமாக வந்தது.
1999 காலகட்டத்தில் ஆந்திராவில், தமிழக எல்லை அருகே உள்ள தொகுதிக்கு பிரசாரம் செய்ய ஒரே ஒருநாள் அவர் என்னை அழைத்தார். நான் பிரசாரம் செய்தால் வெற்றிப்பெற்று அமைச்சர் ஆகிவிடுவேன் எனக்கூறி அப்பாவிடம் அனுமதி வாங்கினார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு வேனில் தான் பயணித்தோம். அப்போது தைரியமாக பேசுவதாகவும், ஒரு சப்ஜெக்ட் கொடுத்தால் அதை உடனடியாக மக்களுக்கு புரியும் வகையில் பேசியதாகவும் அவர் என்னை பாராட்டினார். அப்போதிருந்தே அரசியலில் இறங்கிவிட்டேன்.
நான் பேசிய விதம் பிடித்து மக்கள் ஆர்வமாக கேட்டதை பார்த்த சந்திரபாபு நாயுடு என்னை வேட்பாளராக நிற்க வைத்தார். மக்களை ஈர்க்கக்கூடியவர்களை அரசியலில் எளிதில் விடமாட்டார்கள். அந்த வகையில், எனக்கு தொகுதி பற்றிய விவரம் தெரியாது, அரசியல் தெரியாது என்ற நிலையில், வேட்பாளராக போட்டியிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.