உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பண மதிப்பு கூடுது... உறவுகள் மதிப்பு குறையுது : ஜேசன் சஞ்சய்

பண மதிப்பு கூடுது... உறவுகள் மதிப்பு குறையுது : ஜேசன் சஞ்சய்

முன்னாள் நடிகரும், இன்றைய தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா படித்தவர் தற்போது 'சிக்மா' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். சினிமா இயக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது:

சினிமா குடும்ப பின்னணியில் வளர்ந்ததால் எனக்குள்ளும் சினிமா இருந்தது. நிறைய உலக படங்கள் பார்ப்பேன். அந்த கதையை நண்பர்களுக்கு சொல்வேன். இப்படித்தான் என்னுள் ஒரு கதை சொல்லி உருவானான். இதுதான் முதல் புள்ளி. அப்புறம் கனடாவில் சினிமா மேக்கிங் கோர்ஸ் படிச்சேன். படிக்கிறபோது ஒரு கதை எழுதினேன். அதை ஒரு குறும்படமாக இயக்கினேன். இந்தியா திரும்பியதும், இரண்டு மூன்று கதைகள் வைத்திருந்தேன். அதை நண்பர்களோடு கலந்து பேசி ஒரு கதையை இயக்க முடிவு செய்தேன்.

எனது சித்தப்பா சஞ்சீவ்தான் தயாரிப்பாளர் தமிழ்குமரனை அறிமுகப்படுத்தினார். அவரிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சுபாஷ்கரன் சாரிடம் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அதுதான் இப்போ 'சிக்மா'வாக மாறி இருக்கிறது.

நீர், நிலம், காற்று, பணம் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உறவுகளோடு மதிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இது ஏன் என்று கேட்பதுதான் இந்தப் படம். 'மற்றவங்க உங்களை நம்புகிறார்களோ இல்லையோ உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள்' என்பதுதான் படம் சொல்லும் மெசேஜ். ஆக்ஷன் நிறைய இருக்கும் ஆனாலும் சென்டிமெண்ட்டும், காமெடியும் படத்தில் வந்து கொண்டே இருக்கும்.

எப்போது நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நடிக்க அழைத்தார். அப்போது எனக்கு 20 வயது. பக்குவம் இல்லாததால் மறுத்து விட்டேன். இந்த படம் வெளிவந்த பிறகுதான் தொடர்ந்து படம் இயக்குவதா? நடிப்பதா என்று முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜேசன் சஞ்சய் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !