உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் போட்டி இப்போதே ஆரம்பம்

ஆகஸ்ட் போட்டி இப்போதே ஆரம்பம்

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் நாளை மறுதினம் ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வருகையால் சில பல படங்களின் வெளியீட்டுத் தேதிகளை மாற்றி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வருகிறோம் என 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படக்குழுவினர் எப்போதோ அறிவித்துவிட்டார்கள். சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'கருப்பு' படத்தின் பெரிய வெற்றியால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தற்போது அந்தப் படத்துடன் ஆகஸ்ட் 14ம் தேதி நயன்தாரா, கவின் நடித்துள்ள 'ஹாய்' படம் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சூர்யா படத்துடன் போட்டியிடலாம் என இவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 7ம் தேதி 'டிசி, ஜிடிஎன்' ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரங்களில் இந்த இரண்டு படங்களின் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்கள். 'டிசி' படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 'ஜிடிஎன்' படம் ஜிடி நாயுடு பயோபிக் படமாக உருவாகியுள்ளது. மாதவன், சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி, அதிதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

'ஜிடிஎன்' படத்தை முதலில் ஜூலை 17ல் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். அதன்பின் வெளியீட்டுத் தேதியை மாற்றினார்கள்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு இரண்டிரண்டு படங்கள் தற்போது போட்டியிட ஆரம்பித்துள்ளன. இதில் வேறு சில படங்களும் இணையுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !