உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜனநாயகன்' படத்தில் எங்களுக்கு அநீதி நடந்தது : இயக்குனர் வினோத் பேட்டி

‛ஜனநாயகன்' படத்தில் எங்களுக்கு அநீதி நடந்தது : இயக்குனர் வினோத் பேட்டி

சென்னை : ஜனநாயகன் பட விவகாரத்தில் எங்களுக்கு நடந்தது அநீதி, ஆனால் அதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் இல்லை என இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்' நாளை மறுநாள் ஜூலை 23ம் தேதி திரைக்கு வருகிறது. வினோத் இயக்கி உள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் வெளியாகிறது. படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வினோத், ‛‛பல தடைகளை தாண்டி ஜனநாயகன் படம் வருகிறது. விஜய்யை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்திருந்தனர். அவர் உடன் படம் பண்ண வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பை அவர் அளித்ததற்கு நன்றி. பெண்கள் மீதுள்ள அக்கறையே இந்த படத்தை விஜய் பண்ண காரணம்.

தணிக்கையில் ‛ஏ' சான்றிதழ் கிடைத்தது வருத்தம் தான். அதை எதிர்த்து போராட எங்களுக்கு போதிய நேரமில்லை. திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கும் மக்களுக்கு நன்றி. சென்சார் குழு மீது எந்த கோபமும் இல்லை. தணிக்கை வாரியம் மட்டுமே இந்த படத்தை தடுத்திருக்க முடியாது. எங்களுக்கு அநீதி நடந்துள்ளது. அதை சொல்ல எங்களிம் எந்த ஆதாரமும் இல்லை, மக்கள் புரிந்து கொள்வார்கள்.

படத்தில் பெரிய மாற்றம் செய்யவில்லை, தணிக்கையில் சொன்ன சின்ன சின்ன மாற்றங்கள் தான் செய்துள்ளோம். சட்டசபையில் விஜய் செய்த சைகையை படத்தில் வைக்கவில்லை. படத்தில் அவர் செய்ததை தான் சட்டசபையில் செய்தார். ‛ஜனநாயகன்' படத்தை கரூர் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொய் செய்தி பரப்பினர். அப்படி படமாகி இருந்தால் அங்கு நான் இருந்திருப்பேன். என்னை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படி பொய்யான செய்தி பரப்புவது அறமற்ற செயல். அதை மக்களும் ஏற்கவில்லை.

ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்யும் என்பது தேவையில்லாதது. விஜய்க்கு நிறைய பிரச்னைகள் வந்தன. அதை மக்களும் பார்த்தனர். அதற்கு ஏற்ப அவர்கள் தீர்ப்பு வழங்கினர். இந்த படத்திற்கு அநீதி நடந்து இருக்கா நல்லது நடந்து இருக்கா என்பது மக்களுக்கு தெரியும். அதற்கான நீதியை வழங்க அவர்கள் ஆதரீப்பாங்க என நம்புகிறேன்.

இவ்வாறு வினோத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-07-21 20:11:01

யார் காரணம் என கேட்டால் தெரியாது