100 கோடி கொடுத்தாலும் மாட்டேன் : சோசியல் மீடியா ரீ-என்ட்ரிக்கு நோ சொல்லும் ஐஸ்வர்ய லட்சுமி
மலையாளத்திலிருந்து தற்போது தமிழுக்கும் வந்து வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்ய லட்சுமி. சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் இவர் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி-2' மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இவருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதேசமயம், கடந்த வருடம் சில காரணங்களால் தான் சோசியல் மீடியாவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஐஸ்வர்ய லட்சுமி. ஆனால், இப்போது வரை அவர் சோசியல் மீடியாவுக்குத் திரும்பவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கான காரணம் குறித்து ஐஸ்வர்ய லட்சுமி கூறும்போது, சமூக வலைதளங்களில் எனக்கு எப்போதுமே பாதுகாப்பு உணர்வு இருந்ததில்லை. எனது உடல் தோற்றத்தைப் பற்றி கேலி செய்வது, புகைப்படங்களை மார்பிங் செய்வது மற்றும் தொடர்ந்து என்னை மதிப்பீடு செய்வது போன்ற செயல்களால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். தற்போது அந்தத் தொல்லைகள் இல்லாமல் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் மீண்டும் சோசியல் மீடியாவுக்குள் நுழைய மாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறினார். அதே சமயம், திரைப்பட உலகில் நடக்கும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக தனது செல்லப் பிராணியான நாயின் பெயரில் உள்ள ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.