'ராமாயணா'வில் ஜடாயுவுக்காக குரல் கொடுப்பது அமிதாப் அல்ல.. அனுபம் கெர்
பாலிவுட்டில் அடுத்ததாக பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்படும் படம் 'ராமாயணா'. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ், சீதையாக சாய்பல்லவி நடிக்கின்றனர் மற்றும் அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட்டு சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமாயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்ற ஜடாயு, சீதையை மீட்கும் முயற்சியில் ராவணனுடன் மோதும் போர்க்காட்சி இப்படத்தின் மிக முக்கியமான உணர்ச்சிபூர்வமான தருணமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் திவாரி கூறியுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு அமிதாப்பச்சன் தான் குரல் கொடுக்க இருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சமீப நாட்களாக வீட்டில் ஓய்வெடுத்து வருவதால் அவருக்கு பதிலாக நடிகர் அனுபம் கெர் இந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க இருக்கிறார். இந்த தகவலை நடிகர் அனுபம் கெரே உறுதிப்படுத்தியும் உள்ளார்.