ரொம்ப ஹெவியா இருக்கு ; வினோத்தின் கதையை மாற்றிய விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படமான 'ஜனநாயகன்' நாளை வெளியாக இருக்கிறது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சிரமங்களை எதிர்கொண்டு தற்போது விஜய் முதல்வராக மாறியுள்ள நிலையில் வெளியாகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் இது என்று சொல்லப்பட்டாலும், அதில் ஒரு பாதியை மட்டுமே எடுத்துக் கொண்டு தமிழகத்திற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் பொருந்தும் விதமாக மாற்றி அமைத்திருக்கிறோம் என்று வினோத் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, விஜயிடம் கதை சொல்வதற்காக சென்றபோது, தான் விஜய்க்காக உருவாக்கி வைத்திருந்த கதையைத்தான் கூறினேன் என்றும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, விஜய் சாருக்காக தயார் செய்த கதையை கூறிவிட்டு வந்தேன். ஆனால் இந்த கதை ரொம்பவே ஹெவியாக இருக்கிறது. அதனால் நாம் பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யலாம் என்று கூறினார். ரீமேக் பண்ண வேண்டாம் என்கிற எண்ணத்தில் இருந்த நான், மீண்டும் எப்படியாவது விஜய் சார் இடம் என்னுடைய கதையை மீண்டும் சொல்வோம், அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் சொல்கிறபடி பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்வோம் என்கிற எண்ணத்தில்தான் மீண்டும் அவரை சந்தித்தேன்.
என்னுடைய இந்த கருத்தை அவரிடம் சொல்லிவிட்டு கதை சொல்லத் துவங்கும்போதே தடுத்த விஜய், 'எப்படி இருந்தாலும் நான் கதை பிடிக்கவில்லை என்றால் பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்ய தயாராகத்தான் இருக்கிறீர்கள், அப்புறம் எதற்கு அந்த கதையை சொல்லி நேரத்தை வீணாக்குவானேன்? அதனால் பேசாமல் பகவந்த் கேசரி கதையையே ரீமேக் செய்துவிடலாம்' என்று கூறிவிட்டு, இந்த கதையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என தான் உருவாக்கி வைத்திருந்த சில விஷயங்களை என்னிடம் சொன்னார். அவை எல்லாமே பக்காவாக இருந்தது, அதனால் தான் என்னுடைய கதையை ஒதுக்கி வைத்துவிட்டு ஜனநாயகன் கதையில் பணியாற்றினேன் என்று கூறியுள்ளார்.