உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளையே தேடுகிறேன் : ஷ்ரேயாஸ் தல்படே

தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளையே தேடுகிறேன் : ஷ்ரேயாஸ் தல்படே

கோல்மால், ஹவுஸ்புல் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே. தற்போது நடிகை காஜல் அகர்வால் உடன் ‛தி இந்தியா ஸ்டோரி' எனும் படத்தில் சமூக பிரச்னையை பேசும் திரில்லர் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்துள்ளார். பூச்சிக் கொல்லி மருந்துகளால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான கதையை இப்படம் பேசுகிறது. நாளை மறுநாள் ஜூலை 24ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சேட்டன் டிகே இயக்கி உள்ளார். இந்த படம் பற்றியும், தனது ரோல் பற்றியும் ஷ்ரேயாஸ் அளித்த பேட்டி....

நீங்கள் நடித்த படங்களில் இருந்து இந்தியா ஸ்டோரி மாறுபட்டது. இதில் நடிக்க தூண்டிய விஷயம் என்ன?

ஒரு நடிகராக, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளையே எப்போதும் தேடுகிறேன். இந்தக் கதையைக் கேட்டபோது, ​​இது வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட ஒன்று என்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்னையை இது கையாள்கிறது. இதன் திரைக்கதை எனக்கு பொழுதுபோக்காக அமைந்ததோடு, மிக முக்கியமாக என்னை சிந்திக்கவும் வைத்தது. அதுதான் இப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த படத்தில் நீங்கள் சந்தித்த சவால் என்ன?

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கே உரிய சவால்கள் உண்டு, ஆனால், இந்தக் கதாபாத்திரம் முழுமையான நேர்மையை வெளிப்படுத்த வேண்டியதை கோரியது. இதில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல; அசாதாரணமான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு சாதாரண மனிதன். அவனது வலி, கோபம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இயல்பானதாக தெரிய வேண்டும். முடிந்தவரை மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்த நான் முயற்சித்தேன்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பூச்சிக் கொல்லிகள் குறித்த கவலைகளை இப்படம் எழுப்புகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த படம் உங்களிடம் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா?

நிச்சயமாக, ஒரு விஷயத்தை பற்றி ஆராய தொடங்கும்போது, ​​நாம் உட்கொள்ளும் உணவைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அதிகரிக்கிறது. உணவுத் தேர்வுகள் மற்றும் உணவுப் பொருட்களின் உறையில் உள்ள விவரங்களைப் படிப்பதில் நான் இப்போது அதிக கவனம் செலுத்துகிறேன். உணவுப் பொருட்களை வாங்குவதற்கு முன் மக்கள் சில கேள்விகளையாவது கேட்கத் தூண்டும் வகையில் இப்படம் அமைந்தாலே, நாங்கள் அர்த்தமுள்ள ஒன்றைச் சாதித்துவிட்டதாகவே கருதுகிறேன்.

நகைச்சுவை , சீரியஸான கதைகள்.... எந்த வகையிலான படங்கள் உங்களை அதிகம் உற்சாகப்படுத்துகின்றன?

இரண்டையுமே நான் உண்மையாகவே ரசிக்கிறேன். நகைச்சுவை என்பது மக்கள் நினைப்பதை விடக் கடினமானது; அதேசமயம், தீவிரமான கதையம்சம் கொண்ட படங்கள் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன. ஒரு நடிகராக, குறிப்பிட்ட வகையிலான படங்களுக்குள் மட்டும் நான் முடக்கப்பட விரும்பவில்லை. சிறந்த கதை சொல்லும் முறைதான் என்னை ஈர்க்கிறது.

காஜல் அகர்வாலுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

காஜல் மிகவும் தொழில்முறை நேர்த்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர். அவர் முழுத் தயாரிப்புடன் படப்பிடிப்புக்கு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நேர்மறையான சூழலை உருவாக்குகிறார். நாங்கள் சில உணர்வுபூர்வமான தீவிரமான காட்சிகளில் இணைந்து நடித்தோம்; அவருடன் பணியாற்றியது மிகச் சிறப்பாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !