சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் துள்ளலான ‛தி வெடிங்' சாங் நடனம்!
‛கருப்பு' படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‛விஸ்வநாத் அன்ட் சன்ஸ்'. வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‛பட்டர்பிளை' வெற்றியைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் இரண்டாவதாக திருமண நிகழ்ச்சி பாடலை வெளியிட்டுள்ளனர்.
சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்துள்ள இப்பாடல், ஒரு பிரமாண்ட குடும்ப திருமணத்தின் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி மற்றும் உற்சாகமான சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது. இவர்களின் துள்ளலான நடன அசைவுகளும் திரையில் இருவருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியும் பாடலின் ஈர்ப்பைக் கூட்டுகின்றன. முக்கியமாக இந்த பாடலை சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா- ஜி. வி.பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவான பாடல்கள் என்பதால் இசைப் பிரியர்கள் மத்தியில் இப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் குடும்பக் கதையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.