சல்மான்கான் மற்றும் சகோதரிக்கு நேரில் ஆஜராக சண்டிகர் நீதிமன்றம் சம்மன்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் 'பீயிங் ஹியூமன்' என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் குப்தா என்பவர், சல்மான் கான் மற்றும் அவரது சகோதரி அல்விரா கான் ஆகியோர் தங்களது 'பீயிங் ஹியூமன்' பிராண்டின் கீழ் நகை ஷோரூம் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும், அதற்கு அனைத்து வணிக உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தான் 3 கோடி முதலீடு செய்து நகைக்கடை தொடங்கியதாகவும், ஆனால் அதன்பின் அவர்கள் தனது நகைக்கடைக்கு எந்தவித உதவியும் செய்யாமல் தன்னை ஏமாற்றியதாகவும் சண்டிகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிமன்றம், தற்போது சல்மான் கான் மற்றும் அவரது சகோதரி அல்விரா கான் மற்றும் இதில் தொடர்புடைய ஒரு தனியார் நகை கடை நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆகியோருக்கு வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளது. அதேசமயம், கடந்த சில வருடங்களுக்கு முன்பே இப்படி சல்மான் கான் மீது சண்டிகர் போலீசில் அந்த நபர புகார் கொடுத்தபோது, சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் சல்மான் கான் மற்றும் அவரது சகோதரிகளுக்கு இதில் தொடர்பில்லை என்றும், அது தொடர்பான விளக்கங்களை காவல்துறையில் அளித்துள்ளதாகவும் அப்போது கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.