விசா கிடைக்காததால் ஆஸ்திரேலியா கலை நிகழ்ச்சி ஒத்திவைப்பு : வருத்தம் தெரிவித்த மோகன்லால்
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவருக்கு உரிய காலத்தில் விசா கிடைக்காததால் அவர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாடகி சித்ரா உள்ளிட்ட மற்ற கலைஞர்கள் அங்கே சென்றிருந்தும் கூட இந்த நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தான் சிங்கப்பூரில் தங்கி விசாவுக்காக காத்திருந்ததாகவும், ஆனால் கடைசிவரை விசா கிடைக்கவில்லை என்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மோகன்லால்.
அதில், ‛‛இது ஒரு தொழில்நுட்பக் கோளாறா அல்லது அலுவலக ரீதியான தவறா என்று தான் ஆராய விரும்பவில்லை. இந்த சூழலுக்கு தானே பொறுப்பு ஏற்கிறேன். என் வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியை காண வெகு தூரம் பயணம் செய்த ரசிகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். ரசிகர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம், இதே கலைஞர்களுடன் விரைவில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்துவோம். அதற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.