உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு ‛ருத்ரா' லுக் வெளியிட்ட ‛வாரணாசி' படக்குழு

மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு ‛ருத்ரா' லுக் வெளியிட்ட ‛வாரணாசி' படக்குழு


எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் ‛வாரணாசி'. ராஜமவுலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்தாண்டு ஏப்ரல் 7ல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் ரிலீசாகிறது. மகேஷ்பாபுவின் 51வது பிறந்தநாளான இன்று (ஆக.,9), இப்படத்தில் அவர் நடித்து வரும் ‛ருத்ரா' கதாபாத்திரத்தின் போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது.


‛உக்கிரமானவர் என்பது மட்டும் அவரது ஒரே முகம் அல்ல...' என்ற வாசகத்துடன் இரு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ராஜமவுலி. ஒரு படத்தில் ருத்ரா, மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுப்பது போல, அமைதியான தோற்றத்துடனும், இரண்டாவது படத்தில், கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில் ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு முன் நிற்பதுமாக அப்புகைப்படங்கள் உள்ளன.


இது தொடர்பாக இயக்குனர் ராஜமவுலி குறிப்பிடுகையில், ‛‛தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். அவன் தான் கோராத ஒரு விதியை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வுமிக்கவன். அதே தருணத்தில் மென்மையானவனும், மிகக் கடுமையானவனும் கூட. அந்த பரிமாணங்களை தான் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்தார். யாராலும் கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும்... மென்மையையும்... வெளிப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே.

இந்த காட்சிகள் எங்களின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. எந்த ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கங்களாலும் தர இயலாத ஒன்றை அந்த நில பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா சமவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது நான் வியந்து போனேன். காலை நேரங்களில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை ஐமேக்ஸ் திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என்று நான் உணர்ந்தேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !