மம்முட்டியின் அந்த இரண்டு அடிகள் தான் எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் : சீனு ராமசாமி
சமீபத்தில் நடிகர் மம்முட்டி காரைக்குடியில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் கேரளாவுக்குச் சென்றபோது, திருப்பத்தூர் அருகில் வழி தெரியாமல் தடுமாறினார். அப்போது ஒரு இளைஞர் தனது பைக்கிலேயே மம்முட்டியின் காருக்கு முன்னால் 15 கிலோமீட்டர் தூரம் சென்று வழிகாட்டி, சரியான பாதையில் அவரை அனுப்பி வைத்தார். அந்த இளைஞரை பாண்டியன்.. என்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தி கவுரவித்திருந்தார் மம்முட்டி. அவரது இந்த மனிதாபிமானம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் மம்முட்டியுடனான தனது நெகிழ்ச்சியான இரண்டு அனுபவங்களைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, மாமனிதன் படத்தின் கதையை மம்முட்டியிடம் கூறுவதற்காக, இயக்குனர் ராமின் உதவியுடன் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் நோன்பு விரதத்தில் இருந்தபோதிலும், மிகவும் கனிவாக அமர்ந்து முழு கதையும் பொறுமையாகக் கேட்டார்.
அதன் பிறகு, ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றேன். அங்கே மம்முட்டியும் வந்திருந்தார். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக சற்று தூரத்தில் இருந்த அவரை என்னால் நெருங்கிச் செல்ல முடியவில்லை. அதனால் தூரத்தில் இருந்து 'வணக்கம் சார்' என்று கூறிவிட்டு அங்கிருந்து கடந்து செல்ல முயற்சித்தேன்.
ஆனால், எனது குரலைக் கேட்டதுமே மம்முட்டி உடனே திரும்பி, இரண்டு அடிகள் நடந்து வந்து புன்னகையுடன் எனது கைகளைப் பற்றிக் குலுக்கிச் சென்றார். அப்படி அன்று மம்முட்டி என்னை நோக்கி எடுத்து வைத்த அந்த இரண்டு அடிகள் தான் சினிமா உலகில் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். ஒரு முன்னணி நடிகர் என்னை அடையாளம் கண்டு காட்டிய அந்த மரியாதை எப்போதும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.