ராக்கா கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும்?
அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‛ராக்கா' படம் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் இப்படத்தைப் பற்றி பரவி வரும் பல்வேறு ஊகங்களுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைக்கும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த வீடியோவின் மூலம் படத்தின் கதை, அதன் பிரம்மாண்டம், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் பற்றிய தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தைப் பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. அதில் முக்கியமாக, ராக்கா இரண்டு பாகங்களாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், படத்தில் நடிக்கும் கதாநாயகிகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. தீபிகா படுகோனே இப்படத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவின. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும், மற்றொரு பாகத்தில் மிருணாள் தாக்கூரும் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இவை அனைத்திற்கும் வரவிருக்கும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோ விடை அளிக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரம் தொடங்கிய நிலையிலும், வீடியோ குறித்து ராக்கா படக்குழுவிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்தத் தொடர் அமைதி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மேலும் அதிகரிக்க செய்துள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி விஎப்எக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து உருவாகி வரும் இப்படம், மறுபிறவி மற்றும் அறிவியல் புனைவுக்கதை அம்சங்கள் நிறைந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.