ஹிந்தியில் வெற்றித்தடம் பதிப்பாரா பாலாஜி மோகன்?
'காதலில் சொதப்புவது எப்படி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன், தனுஷை வைத்து 'மாரி', 'மாரி 2' படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தமிழில் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. இடையில், யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தை தயாரித்ததுடன், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது சத்தமில்லாமல் ஹிந்தியில் ‛நயே நவேலி' என்கிற படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன். பாலிவுட் நடிகையும், 'துரந்தர்' பட இயக்குநர் ஆதித்ய தர்ரின் மனைவியுமான யாமி கவுதம் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷின் பாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான ஆனந்த் எல். ராய் தயாரித்துள்ளார்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் ஹிந்தியில் வெற்றித் தடம் பதிப்பாரா பாலாஜி மோகன் ? பொறுத்திருந்து பார்க்கலாம்.