நடிகை சவுகார் ஜானகி உடல் தகனம்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (94), உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(ஆக., 21) சென்னையில் காலமானார். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 300க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்தவர். பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும் வென்றவர்.
சென்னை, தேனாம்பேட்டை அருகே செனடாப் சாலையில் உள்ள சவுகார் ஜானகியின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. சவுகார் ஜானகி உடலுக்கு சினிமா பிரபலங்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். எம்எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டிபத்மினி, சத்யராஜ் உள்ளிட்ட சிலர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். அதேப்போல் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மா சுப்ரமணியம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.