உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் சுயசரிதை எழுதும் பணி தொடக்கம் ; பயோபிக் படம் எப்போது? - சவுந்தர்யா ரஜினி தகவல்

ரஜினியின் சுயசரிதை எழுதும் பணி தொடக்கம் ; பயோபிக் படம் எப்போது? - சவுந்தர்யா ரஜினி தகவல்

ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறார். தனது நீண்டகால திரைவாழ்க்கையில் அவர் பல ஏற்ற இறக்கங்கள், நிதி நெருக்கடிகள், உடல்நலக் குறைவுகள் மற்றும் சர்ச்சைகளைச் சந்தித்துள்ளார்.

75 வயதிலும் தனது மாஸ் வெற்றிகளைத் தொடர்ந்து வழங்கி வரும் ரஜினி, தற்போது ஜெயிலர் 2 படத்தை அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் பிஸியாக நடிக்கிறார். இதற்கிடையே, அவர் தனது சுயசரிதையை எழுதும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது மகளும் இயக்குநருமான சவுந்தர்யா, தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதும் பணியை அருகில் இருந்து பார்த்து வருவதாகக் கூறியுள்ளார். பெங்களூரில் பஸ் கண்டக்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தது வரையிலான அனைத்து அனுபவங்களையும் அவர் இதில் பதிவு செய்து வருகிறார்.

இந்த புத்தகம் பரமஹம்ச யோகானந்தரின் புகழ் பெற்ற ஆன்மிக நூலான ஒரு யோகியின் சுயசரிதை போல, பல தலைமுறைகளுக்கும் தேவையான ஒரு முக்கியமான வழிகாட்டி புத்தகமாக இருக்கும். அதேசமயம் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் சவுந்தர்யா.

மேலும், ரஜினிகாந்தின் சுயசரிதையை திரைப்படமாக எடுக்கும் சூழல் எதிர்காலத்தில் அமைந்தால், அதை இயக்குவதோ அல்லது தயாரிப்பதோ தனது வாழ்க்கையிலேயே மிகவும் சிறப்பான மற்றும் உணர்வுபூர்வமான திட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !