உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓ.டி.டி v/s தியேட்டர்கள்... கண் துடைப்பா, காலத்தின் கட்டாயமா?

ஓ.டி.டி v/s தியேட்டர்கள்... கண் துடைப்பா, காலத்தின் கட்டாயமா?

கதைப் பஞ்சங்களால், கட்டம் சரியாக இல்லாததால், 90 சதவிகித தோல்விகளால் ஏற்கனவே மெலிந்து நலிந்து கிடக்கும் தமிழ் சினிமா இன்னொரு துயர சம்பவத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. ஓ.டி.டி. வியாபாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளை எதிர்த்து செப்டம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து செயல்பாடுகளும் இழுத்து மூடப்படும் என்கிற தயாரிப்பாளர் சங்கங்களின் அறிவிப்புதான் அது.

ஓடிடியால் பஞ்சாயத்து
புதிய திரைப்படங்கள் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறது. மேலும், வருகிற செப். 1 முதல் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் படங்களை வெளியிடுவோம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம்… தென் மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதனைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு 250 படங்கள் வெளியாகின்றன. இவற்றில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த தொகையில் பாதிகூட பெறாமல், ஆண்டுக்கு ரூ. 700 கோடிக்கும் மேல் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த முடிவை ஏற்க முடியாது. ஆகையால், செப்.1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. மேலும், இந்தப் பிரச்னையை முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வுகாண உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

ஹீரோ அண்ட் வில்லன்
இப்போது பற்றி எரிய ஆரம்பித்திருக்கிற இந்த நெருப்பு, ஓ.டி.டி.கள் ஆதிக்கம் துவங்கிய காலத்திலிருந்தே புகைந்து கொண்டிருந்த ஒன்று தான். சினிமாவுக்கு தோள் கொடுக்கும் தோழனாய் உள்ளே நுழைந்து இன்று தலைக்கு மேல் அமர்ந்து மொத்த பிடியையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டன ஓ.டி.டி. நிறுவனங்கள் என்பதுதான் கசப்பான உண்மை. நாணயத்தின் இன்னொரு பக்கமாக, இதே ஓ.டி.டி நிறுவனங்கள்தான் பல தயாரிப்பாளர்களுக்கு அட்சய பாத்திரங்களாய் அள்ளிக் கொடுக்கின்றன என்பதுவும் பசையான உண்மை.

ஆக நண்பனும் செல்லப் பகையாளியுமாக இருக்கிற ஓ.டி.டி. வாலாக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மத்தியில்தான் பஞ்சாயத்தே இருக்க வேண்டும். பாலிவுட்டில் தயாராகும் படங்கள் 80 சதவிகிதம் ஓ.டி.டியில் வியாபாரம் ஆகும்போது பிராந்தியப் படங்கள் 20 சதவிகிதம் மட்டுமே வியாபாரமாகின்றன. இப்படி படங்களை வாங்குவதில் பாரபட்சம். படங்களின் ரிலீஸ் தேதியை ஓ.டி.டி. நிறுவனர்கள் முடிவு செய்வது, தியேட்டர்களில் சுமாராக ஓடினால்தான் படங்களை வாங்குவோம் என்று நிபந்தனை விதிப்பது, சிறு தயாரிப்பாளர்களை சுத்தலில் விட்டு உதாசீனம் செய்வது என்று இவர்களுக்கு நடுவிலேயே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருக்கின்றன.

எட்டு வார கட்டுப்பாடு பயன் தருமா...
ஆனால் இப்போது குறுக்கே வில்லனாய் விஸ்வரூபம் எடுத்திருக்கிறவர்களோ, சண்டையில் சட்டைக்கு சிறு சேதாரம் கூட ஆகாத விநியோகஸ்தர்கள். சினிமாவில் ஆரோக்கியமான விநியோகஸ்தர்கள் என்கிற இனம் அழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. உண்மையை சொல்லப்போனால் தயாரிப்பாளர்களிடம், 'நீ நெல்லு கொண்டு வா… நான் உமி கொண்டு வர்றேன்.. ரெண்டு பேரும் ஊதி ஊதித் தின்னலாம் ' கதைதான் பல வருடங்களாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்கள் தவிர்த்து யருடைய படமும் எம்.ஜி. என்கிற மினிமம் கியாரண்டிக்கு விற்பனை ஆவதே இல்லை. சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களின் படங்கள் விற்பனை ஆனால் கூட அதற்கு முன்பணமோ, அல்லது டிக்கெட் விற்ற ஒரிஜினல் கணக்கோ கூட வருவதில்லை என்கிற நிலையில் அவர்களுக்கு விதிக்கப்படுகிற எட்டு வார கட்டுப்பாட்டினால் என்ன பயன் ?

கண் துடைப்பா
இந்த ஸ்டிரைக்கில் இன்னொரு விநோத உள்குத்தும் இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான ரெட் ஜெயன்ட், ராஜ்கமல், ஏ.ஜி.எஸ், ட்ரீம் வாரியர், சக்தி பிலிம் பேக்டரி, க்ரீன் ஸ்டுடியோ ஆகிய அனைத்துமே விநியோகத்துறையிலும் வலுவாக இயங்கி வருகின்றன. திரையரங்க உரிமைகளும் கைவசம் வைத்திருப்பவர்கள்.

அதாவது அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய மூவருமே சாட்சாத் இவர்களேதான். காலையில் விநியோகஸ்தராக எட்டுவார நிபந்தனை விதிப்பவர் நண்பகலில் தியேட்டர் அதிபராக அதே விநியோகஸ்தர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து, மாலையில் தயாரிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்த பின்னர் ஸ்ட்ரைக் அறிவிப்பார். இந்தக் கொடுமையை உலகத் தொலைக்காட்சிகளில் வேறெங்காவது காண முடியுமா?

ஆக இந்த ஸ்டிரைக் அறிவிப்பு என்பது சும்மா டைம் பாஸ்தான். அக்டோபரில் ரஜினி படம் இருக்கிறது. முதல்வர் பிள்ளை ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' இருக்கிறது. இன்னும் சில பெரிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன என்கிறபோது மும்மூர்த்திகள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் ஆகிக் கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

ஒருவேளை கையை மீறி ஸ்டிரைக் நடந்தால் நாள் முழுக்க உழைத்துவிட்டு இரவில் பேட்டாவுக்காக கியூவில் நிற்கும் அப்பாவி தொழிலாளர்கள், பழைய ஸ்டிரைக் காலங்களில் கிடந்ததைப் போல இன்னும் சில தினங்கள் பட்டினி கிடப்பார்கள். அந்த பட்டினி கால பேட்டிகளை எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி தளங்களுக்கு விற்க முடியுமா என்று பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !