உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஆனந்த யாழை தொடங்கி அடடா அடமழைடா' வரை... : யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துகுமார் கூட்டணி செய்த மாயம்

‛ஆனந்த யாழை தொடங்கி அடடா அடமழைடா' வரை... : யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துகுமார் கூட்டணி செய்த மாயம்

இன்று இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் 46வது பிறந்தநாள். இளையராஜா இளையமகனாான இவர், தனது 16 வயதில் 1997ல் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 150-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

யுவனின் காதல், சோலோ, துள்ளல் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பின்னணி இசையிலும் யுவனின் தனித்தன்மை பாராட்டப்படுகிறது. குறிப்பாக, யுவன் ஷங்கர்ராஜா, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் கூட்டணியில் உருவான பாடல்கள் சாகாவரம் பெற்றவை. யுவன் இசையமைத்த படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார் நா.முத்துகுமார். நந்தா படத்தில் ஓராயிரம் யானை கொன்றால் பரணி என்ற பாடலில் அந்த கூட்டணி முதலில் தொடங்கியது. பிற்காலத்தில் தவிர்க்க முடியாத கூட்டணி ஆனது. அப்படி இவர்கள் கூட்டணியில் வந்த பிரபலமான பாடல்கள் சில...

1) ஆனந்த யாழை மீட்டுகிறாய்



ராம் இயக்கத்தில் வந்த தங்கமீன்கள் படத்தில் இடம் பெற்ற அப்பா, மகள் பாசப்பாடல். ஸ்ரீராம் பார்த்தசாரதி உணர்வுபூர்வமாக பாடியிருந்தார். இன்றும் பல பாசக்கார அப்பாக்களின் செல்போன் காலர் டியூனாக இந்த பாடல் இருக்கிறது. இந்த பாடலின் வரிகள் பலருக்கும் மனப்பாடம். அந்த அளவுக்கு அழகான டியூனை கொடுத்து இருந்தார் யுவன். இந்த பாடலுக்காக நா.முத்துகுமாருக்கு தேசிய விருதும் கிடைத்தது

2) கண்பேசும் வார்த்தைகள்



செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயில்போ காலனி படத்தில் யுவன், நா.முத்து குார் கூட்டணியில் வந்த இன்னொரு ஹிட் பாடல். கார்த்திக் பாடியிருந்தார். இந்த பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை எனலாம்

3) அடடா மழைடா அடமழைடா



லிங்குசாமி இயக்கிய பையா படத்தில் இடம் பெற்ற ஒருவகை துள்ளல் பாடல். கார்த்தியும், தமன்னாவும் ஆடியதை பார்க்கும்போது, நமக்கும் மழையில் நனைந்த பீலிங் கிடைக்கும். ராகுல் நம்பியார், சைந்தவி பாடியிருந்தனர்.

4) போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்



எழில் இயக்கிய தீபாவளி படத்தில் இடம் பெற்ற சோகப்பாடல். ஆனாலும், யுவனின் மெட்டு, நா.முத்துகுமாரின் வார்த்தைகளால் பாடல் ரசிக்கப்பட்டது. யுவனே இந்த பாடலை பாடியது சிறப்பு. காதலியை, காதலனை பிரிந்தவர்களுக்கு இந்த பாடல் கண்ணீரை வரவழைத்தது

5) என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன் பேர் என்னவென கேட்டேன்



பாணா காத்தாடி படத்தில் இந்த பாடலை அதர்வா, சமந்தாவுக்காக பாடியிருப்பார் சாதனா சர்க்கம். யுவன், நா.முத்துகுமார், சாதனா கூட்டணியில் வந்த சிறந்த பாடல்களில் ஒன்று. காதலர்களிடையே இந்த பாடல் பிரபலம்

6) தேவதையை கண்டேன்



காதல்கொண்டேன் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் தேவதை, தேவதை என்ற வார்த்தைகள் ஒலிக்கும்போது தேவதைகளை பார்க்கும் பீலிங் கிடைக்கும். ஹரிஷ்ராகவேந்திரா குரலில் வரும் பாடலில் தனுசும், சோனியாஅகர்வாலும் வாழ்ந்து இருப்பார்கள்

7) எங்கேயோ பார்த்த மயக்கம்



யாரடி நீ மோகனி படத்தில் இடம் பெற்ற பாடல். ஒரு மழையில் நயன்தாரா கண்களில் இந்த பாடல் தொடங்கும். அதை ரசித்து பார்ப்பார் தனுஷ், நாமும் அந்த இடத்துக்கு செல்லும் உணர்வு கிடைக்கும். அருமையான மெலோடி பாடல், ஒரு அமைதி இழையோடும். உதித் நாராயணன் உருகி பாடியிருப்பார்

8) காதல் வளர்த்தேன்



மன்மதன் படத்தில் சிம்புவுக்காக கேகே பாடிய பாடல். இசையும், ட்யூனும், குரலும் ஒருங்கே அமைய, சிம்புவின் நடிப்பும் பாடலுக்கு வலு சேர்த்தது

9) பேசுகிறேன் பேசுகிறேன்



வசந்த் இயக்கிய சத்தம் போடதே படத்தில் இடம் பெற்ற பாடல். வரிகளுக்கு ஏற்ப மனதி்ற்குள் அடங்காமல் அலை பாயவிடும் பாடல். நேகாபேசின் பாடியிருப்பார்

10) பறவையே எங்கு இருக்கிறாய்



ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் இடம் பெற்ற பாடல் இது. காதலி அஞ்சலியை தேடி ஜீவா தொலைதூரம் பயணித்து வந்தபிறகு வரும் அழகிய பாடல். இந்த நெஞ்சை உருக்கும் பாடலை இளையராஜா பாடியிருந்தார்.

இந்த பாடல்களை தவிர, யுவன்ஷங்கர்ராஜா, நா.முத்துகுமார் கூட்டணியில் வந்த எங்க ஏரியா உள்ள வராதே(புதுப்பேட்டை), தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் (கேடிபில்லா கில்லாடி ரங்கா), ஆயிரம் ஜன்னல் வீடு(வேல்), யாரோ உச்சி கிளைமேலே (தரமணி), யார் இந்த (பாஸ் என்ற பாஸ்கரன்). மச்சான் மச்சான் (சிலம்பாட்டம்), ஏதோ செய்கிறாய் (வாமனன்), என்னமோ நடக்குது(சண்டக்கோழி), உயிரே(பூஜை), அழகோ அழகு(சமர்), ஒரு மாலை நேரம் (நான் மகான் அல்ல), ஒரு மலையோரம்(அவன் இவன்) ஆகிய பாடல்களும் இன்றும் பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா, நா.முத்துகுமார் கூட்டணியில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கீழே கமென்ட்டில் சொல்லுங்க...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !