உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்னக்கிளி முதல் வனக்கிளி வரை... இளைய தலைமுறைக்கும் மாஸ்டர் கிளாஸ் எடுக்கும் இளையராஜா!

அன்னக்கிளி முதல் வனக்கிளி வரை... இளைய தலைமுறைக்கும் மாஸ்டர் கிளாஸ் எடுக்கும் இளையராஜா!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் அதிகரித்துவிட்ட நிலையில் ‛if you are bad… I am your dad' என்று மறுபடியும் மாஸ்டர் கிளாஸ் எடுத்திருக்கிறார் இளையராஜா.

இசை விருந்து

யெஸ்… கடந்த இரு வாரங்களாக சமூக வலைதளங்களில் தாரை தப்பட்டைகள் கிழிய வலம் வந்து கொண்டிருப்பவை 'டோரதி' படத்தின் 'கல்யாண மாலை', ' முத்துமணி' ஆகிய இரு பாடல்கள். இந்த இரு பாடல்களுமாக சேர்ந்து சுமார் ஒரு கோடி பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. சும்மாவே ஆடும் ராஜா ரசிகர்கள் காலில் இப்படி சலங்கையைக் கட்டிவிட்டால் கெட்ட ஆட்டம் ஆடமாட்டார்களா?



அபயங்கர், அனிருத் கண்ணுங்களா... இளையராஜான்னு யாரோ ஒருத்தர் புதுசா வந்திருக்கார். கொஞ்சம் அலெர்ட்டா இருங்கப்பா… தலைவர் அந்த 3.31வது செகண்ட்ல 'வனக்கிளியே உனைக்காணாத நாளிங்கு நாளில்லையே' ன்னு பாட ஆரம்பிக்கிறப்ப கண்ணு பொங்கிடுச்சி…

'யாரோ இளையராஜான்னு புது மியூசிக் டைரக்டராம்பா. பின்னிப் பெடலெடுத்திருக்கார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு பேசிக்கிறாங்க' என்று 'மொழி' படத்து எம்.எஸ்.பாஸ்கர்களாய் மாறி விதவிதமான உருட்டல்கள், உருகல்கள், அவற்றுக்கு மத்தியில் சில கருகல்கள்.

இந்த கருகல்கள் ராஜாவின் அன்னக்கிளி காலம் தொடங்கி இன்றுவரை நீக்கமற நிறைந்திருப்பவை. 'நல்ல கவிஞர்களுக்கு சான்ஸ் தராம அவரே பாட்டையும் எழுதியிருக்காருப்பா… அதுவாவது பரவாயில்லை. அந்த குரலை வச்சிக்கிட்டு அவரே பாடியிருக்காருப்பா…

இந்த டோரதி படப்பாடல்களுக்கு எதிராக ஒலிக்கும் குரல்களிலும் அதே புகார்கள். இந்த ஆதங்கக் குரல்கள் ராஜா தனது 100 வது வயதில் அவரது இரண்டாயிரமாவது பாடலுக்கு இசையமைக்கிற காலம் வரை தொடர்ந்து ஒலிக்க வாழ்த்தி நாம் அடுத்த சங்கதிக்குப் போவோம்.

ராஜாவின் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள ரசிகர்கள் இவ்விரு பாடல்களையும் வீடியோ கன்டென்ட் ஆக்கி பல்லாயிரக்கணக்கில் பகிர்ந்துவரும் நிலையில் சில வெள்ளைக்கார துரைகளும் ராஜா குறித்து தங்கள் மழலைத் தமிழில் யூடியூப்களில் சிலாகிப்பதைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

83 வயதிலும் மியூசிக் மிராக்கிள்

கமல் தொடங்கி மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, வெற்றிமாறன் என்று பலரும் 'இன்றைய தலைமுறை இயக்குநர்கள் ஒரே ஒரு படமாவது ராஜாவுடன் பணியாற்றிப் பாருங்கள் ' என்று சிபாரிசு செய்து வந்த நிலையில் இன்று பல முன்னணி இயக்குநர்கள் ராஜாவுடன் பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

அப்பட்டியலில் தனது 10 வது படத்துக்காக ராஜாவுடன் கைகோர்த்துக் கொண்டவர் கார்த்திக் சுப்பாராஜ். சுப்பாராஜாவுக்கு 10வது படமான இந்த 'டோரதி' இளையராஜாவுக்கு 1500 ஐ நெருங்கும் படம். யோசித்துப் பார்த்தால் 'வாட் எ ஹிஸ்டாரிக்கல், மெடிக்கல், மியூசிக்கல் மிராக்கிள்' இது ? 76ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு இசைக்கத் துவங்கியவர் இன்று தனது 83 வது வயதில் இளைய சமூகத்துடன் அதே உத்வேகத்துடன் இயங்கி வருவதை, அதுவும் முழுமுனைப்புடன் இயங்கி வருவதை விவரிக்க எந்த மொழிகளிலாவது வார்த்தைகள் உண்டா?



எதிர்காலத்தில் எழுதப்படும் சரித்திரத்தில் இளையராஜா பற்றிய குறிப்பு இப்படித்தான் இருக்க முடியும். இந்த 50 ஆண்டுகளில் இளையராஜாவுக்கு எதிர் திசையில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தார்கள்… இருந்தார்கள்… போனார்கள். ஆனால் இளையராஜா என்கிற பெயருக்குப் பக்கத்தில் ஒருவருமே நெருங்க முடிந்ததில்லை.

காரணம்… அவரே சொல்வதைப்போல் இசையும் அவரும் வேறல்ல. சகலமும் துறந்து இசைக்கு மட்டுமே தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்திருப்பது. இசைக்கு அவர் கொடுக்கும் மரியாதை. தனது 50வது ஆண்டு திரைப்பயண கொண்டாட்டத்தை ஒட்டி உலகம் முழுக்க இசைக்கச்சேரிகள் நடத்தி வரும் ராஜா, எந்தக் கச்சேரியிலும் ஒரு நிமிடம் கூட அமர்வதில்லை என்பதை இன்று அவருடன் பயணிக்கும் சக இசைக் கலைஞர்களே வியப்பதைப் பார்க்க முடிகிறது.

முன்னர் கொஞ்சம் தயங்கி, பின்னர் ஒரு கட்டத்தில் அவருடன் பணியாற்றத் தொடங்கும் ஒவ்வொரு இயக்குநருமே அது குறித்துப் பதிவிடும்போது அதில் கண்ணீர் துளிர்க்காமல் இருந்ததேயில்லை.

'அவதாரம்' படத்துக்கு தென்றல் வந்து தீண்டும்போது' பாடல் வாங்கிய கதையை நாசரும், 'ஹே ராம்' படத்துக்கு ராஜா தந்த இசைக்கொடை குறித்து கமலும் பேசும் காணொலிகள் யூடியுப் தளங்களில் காணக்கிடைக்கின்றன. அவற்றை ஒரு முறை பார்த்தால் ஏன் இவர் ராஜாதி ராஜனென்பது புரியும். இதோ லேட்டஸ்டாய் பணிபுரிந்த கார்த்திக் சுப்பாராஜின் இன்றைய எக்ஸ் தளப் பதிவு ஒரு சாம்பிள்…

மாயாஜால ஹார்மோனியம்

‛‛மேஸ்ட்ரோ ராஜா சாருடன் #டோரதி படத்திற்காக எனது முதல் நாள் வேலை, அவர் தனது மந்திரக் கரங்களால் அந்த மாயாஜால ஹார்மோனியத்தில் #முத்துமணி பாடலுக்கு இசையமைத்தபோது தொடங்கியது. நான் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டிருந்தேன், அந்தத் தருணத்தைக் காண்பது ஒரு கனவு போல இருந்தது. ராஜா சார் 'வனக்கிளியே' பாடலைப் பாடத் தொடங்கியபோது...... அந்தத் தருணத்தில் என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.... நான் கண்ணீர் சிந்தினேன், மிதந்தேன், கூடுவிட்டு கூடு பாய்ந்தேன். ஆசுவாசமானேன்.... அனைத்தும் ஒரே நேரத்தில்.... இப்போது உங்கள் அனைவரிடமிருந்தும் அந்தப் பாடலுக்கு இதே போன்ற எதிர்வினைகளைக் காணும்போது நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போகிறேன்..... ஆம்... ராஜா சார் எங்கள் இசைக் கடவுள், அவருடைய குரல் கடவுள் நம்மிடம் பேசும் ஒரு வழி என்பதுதான் நிதர்சனம்…'' என்று நெகிழ்கிறார்.



கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிடும் அந்த எதிர்வினைகள் குறித்து கொஞ்சம் மகிழ்ச்சிதான் என்றாலும் குறுக்கே மறுக்கே பதிவுபோடும் சில ஜென் ஸி கிட்ஸ்கள்,வேறு சில காரணங்களால் ராஜாவின் மீது காலம் முழுக்க வன்மம் கொண்டிருப்பவர்கள் ராஜா அனிருத்துக்கே டப் கொடுக்கிறார். சாய் அபயங்கருக்கு தண்ணி காட்டுகிறார், ராஜா கம்பேக் என்று போடுகிற அல்ப கமெண்டுகளையும் பார்க்க நேர்கிறது.

உங்க நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க ராசாக்களே… 83வது வயதில் 1500 படங்கள் அவற்றுக்கு சுமார் 10 ஆயிரம் பாடல்கள்… ஒரு துளி கேட்டாலும் படம் நினைவுக்கு வருகிற, மனசை அள்ளும் பின்னணி இசைகள்… ஹவ் டு நேம் இட், கீத வழிபாடு, திருவாசகம் வழியாக சிம்பொனி வரை எத்தனை ஆல்பங்கள்…

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித சாதனை அல்ல என்பதுதானே நிஜம். உங்கள் வன்மம் தொடரட்டும். எங்கள் ஜென்மம் ராஜாவுக்கானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !