அடுத்த படத்திற்கும் இசை இளையராஜா தான் : கார்த்திக் சுப்பராஜ்
இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார் சினிமாவில் 50 வருடங்களைக் கடந்த இசையமைப்பாளர் இளையராஜா.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், 'டோரதி' படத்திற்கு இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மஞ்சனத்தி' படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார்.
செப்டம்பர் 25ல் வெளியாக உள்ள 'டோரதி' படத்தின் 'ஓஎஸ்டி', அதாவது 'ஒரிஜனல் சவுண்ட் டிராக்', படத்தில் இடம் பெற்றுள்ள பின்னணி இசையின் 18 டிராக்குகளை செப்டம்பர் 5ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
சென்னையில் நடைபெற உள்ள விழாவில் அந்த இசையை லைவ் ஆர்க்கெஸ்ட்ரா உடன் நடத்த உள்ளார் இளையராஜா. இதற்காக பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், தனது அடுத்த படத்திற்கும் இளையராஜா தான் இசையமைக்கிறார் என்று சொன்னார்.
'டோரதி' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களான 'கல்யாண விருந்து, முத்துமணி' ஆகிய பால்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலை பட வெளியீட்டிற்கு முன்பாக வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார் கார்த்திக்.