இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் : நெகிழும் கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் டோரதி. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கல்யாண விருந்து, முத்துமணி பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. படம் குறித்து, இளையராஜா இசை குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசியது...
1990களில் மதுரை பின்னணியில் நடக்கும் இந்த கதையை கொரோனா காலத்தில் எழுதிவிட்டேன். அடுத்து வேறு சில படங்கள் இயக்க வாய்ப்பு வந்ததால் இப்போது படமாக்கி உள்ளேன். இரண்டு மதுரை நண்பர்கள் வாழ்க்கையில் கேரளாவில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷால் என்ன மாற்றம் நடக்கிறது என்பது கதை. இந்த கேரக்டருக்காக உடல் இளைத்து பல ஆண்டுகள் காத்திருந்தார் சனந்த். குறும்படங்கள் நடித்த காலத்தில் இருந்து ரிஷிகாந்த் தெரியும். இந்த கதை கேட்டவுடன் மறுக்காமல் ஓகே சொன்னார் கீர்த்தி சுரேஷ். அவர் கேரக்டர் பெயர் டோரதி. கிரேக்க மொழியில் கடவுள் பரிசு என அர்த்தம்.
இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கொஞ்சம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவரிடம் போட்டு காண்பித்தேன். அவர் பார்த்தவுடன் நாளை 8 மணி முதல் ரீ ரிகார்டிங் பணிகள் தொடங்கலாம் என்றார். அவருடன் பணியாற்றிய அந்த 25 நாட்கள் மறக்க முடியாதது. அவர் கொடுத்த கல்யாண விருந்து, முத்து மணி பாடல் வைரல் ஆகிவிட்டது. இன்னும் ஒரு பாடல் இருக்கிறது. செப் 5ல் இந்த படத்தின் பின்னணி இசையை மட்டும் விழா நடத்தி வெளியிடுகிறோம். இந்த படத்தின் பிரோமோ பாடலில் இளையராஜா நடித்து பாடி இருக்கிறார். நான் பீட்சா எடுத்த காலத்தில் விஜய் சேதுபதி யார் என்று கேட்டார்கள். படம் வந்தபின் அவர் யார் என்று தெரியும் என்றேன். அதேபோல் டோரதி வந்தபின் பல நடிகர்கள் பிரபலம் ஆவார்கள்'' என்றார்.