'மிஸ்டர் எம்.ஜி.ராமசந்திரன்' என அழைத்த ஒரே ஹீரோயின் : அஷ்டவதானி பானுமதியின் 101வது பிறந்தநாள்
ஒரே நேரத்தில் எட்டுப் பணிகளைச் செய்யக் கூடியவர்களை 'அஷ்டவதானி' என அழைப்பார்கள். சினிமாவில் அப்படி அழைக்கப்பட்டவர் நடிகை பானுமதி ராமகிருஷ்ணா. சினிமாவில் கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், பாடகி, இயக்குனர், எடிட்டர் , ஒளிப்பதிவு நிபுணர், ஸ்டுடியோ அதிபர் ஆகிய சகலத் துறைகளிலும் தனித்திறமை பெற்றிருந்ததால் அவரை அஷ்டவதானி என்றும், சகலகலா வள்ளி என்றும் அழைக்கப்பட்டார். இன்று அவரின் 101வது பிறந்தநாள். அவரை பற்றிய சிறு குறிப்பு...
* ஆந்திரப் பிரதேசத்தின் ஒங்கோல் அருகே, 1925ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, சரஸ்வதம்மா மற்றும் பொம்மராஜு வெங்கட சுப்பையா தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் பானுமதி. சிறு வயதில் இருந்தே கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசை இரண்டையும் படித்தார்.
* 1939ம் ஆண்டு, தனது 13 வயதில் 'வர விக்ரங்கதம்' படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஒரு வயதானவரை திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டு, பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் 13 வயது சிறுமியான காளிந்தியாக வந்தார்.
* ஆரம்ப காலத்தில் 'மாலதி மாதவம்' மற்றும் 'தர்ம பத்தினி' படங்களில் கதாநாயகியாக நடித்தார் . சினிமாவுக்காக குதிரையேற்றத்தையும் வாள் சண்டையையும் கற்றுக் கொண்டார்.
* 1943ம் ஆண்டு 'கிருஷ்ண பிரேமா'வின் படப்பிடிப்பின்போது, அதில் உதவி இயக்குனராக இருந்த ராமகிருஷ்ணாவை காதல் திருமணம் செய்தார். அப்போது பானுமதி பிரபல நடிகை, அவர் வயது 18. பானுமதி தந்தை இந்த திருமணத்துக்கு சம்மதிக்காதததால் வீட்டை விட்டு ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்தனர். இந்த பந்தம் 40 ஆண்டுகள் நீடித்தது.
* திருமணத்துக்குபின் நடிக்க வேண்டாம் என பானுமதி நினைத்தாலும் கலைத்துறை அவரை விடவில்லை. பி.என். ரெட்டி இயக்கத்தில் அவர் நடித்த ஸ்வர்கசீமா 'படம் 1945-ல் வெளியாகி அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது. என்.டி.ராமராவ் ஜோடியாக அவர் நடித்த மல்லேஸ்வரி படமும் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் 1951ல் வந்தது.
* அன்று முதல் பானுமதி தென்னிந்தியாவில் முன்னணி நடிகை ஆனார். அவர் சம்பளமும் அப்போது கணிசமாக உயர்ந்தது. அந்த காலத்திலேயே 25 ஆயிரம் சம்பளம் பெறும் நடிகை ஆனார். நடிப்பதுடன் நின்றுவிடாமல் இயக்குனர் ஆனார், பரணி ஸ்டூடியோ என்ற சொந்த ஸ்டூடியோ கட்டினார். 15க்கும் அதிகமான படங்களை தயாரித்தார்
* பானுமதி 60 ஆண்டுகளில் 97 படங்களில் நடித்தார்; அவற்றில் 58 தெலுங்கிலும், 34 தமிழிலும், 5 ஹிந்தி மொழியிலும் அமைந்தன.
* 1953-ல் 'சந்திரணி' திரைப்படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இயக்கினார். அவரே இரட்டை வேடத்தில் நடித்தார். இந்தியாவின் முதல் பெண் இயக்குனர் என பெருமை பெற்றார்.
* பானுமதி 1963-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகை ஆவார். பின்னர், இந்தியத் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2003ல் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். 30-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'திரைப்படத் துறையில் பெண்கள்' பிரிவில் அவர் கவுரவிக்கப்பட்டார். இந்தியத் திரைப் படத்துறையின் 100 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில், இந்திய அஞ்சல் துறை 2013-ல் பானுமதியின் 5 ரூபாய் அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. 2005ம் ஆண்டு காலமானார்.
* பானுமதியின் கர்வமும், அவர் பேச்சு இன்றும் சினிமாவில் பெரிதாக பேசப்படுகிறது. சில பெரிய ஹீரோக்கள் பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்க, என்னுடன் அவர்கள் நடித்தார்கள். அவர்களிடம் என்னை பற்றி கேளுங்கள் என்றாராம். அந்த காலத்தில் எல்லாராலும் பெரிதும் மதிக்கப்பட்ட எம்ஜிஆரை கூட, மிஸ்டர் எம்.ஜி.ராமசந்திரன் என அழைப்பாராம். சினிமாவில் அவருக்கு சீனியர் என்பதால் இந்த உரிமை. மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆரை விட பானுமதிக்கே அதிக சம்பளமாம். இவர் நடிக்க மறுத்த மிஸ்சியம்மா படத்தில் நடித்தவர் சாவித்ரி.
* எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்தக்கால பெரிய ஹீரோக்களுடனும், என்.டி.ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ் போன்ற பெரிய தெலுங்கு ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். எம்ஜிஆர் உடன் நாடோடி மன்னன், மதுரை வீரன், மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், சிவாஜி கணேசனுடன் தெனாலிராமன், அம்பிகாபதி, கள்வனின் காதலி, அறிவாளி, ரங்கோன் ராதா மற்றும் ஜெமினி கணேசனுடன் பெண்ணின் பெருமை, சதாரம் போன்ற படங்களிலும் நடித்தார்.
* 1970க்கு பிறகு பானுமதி பெரிய நாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். அவரது சொந்த தயாரிப்பில் அவரே இயக்கி வெளிவந்தவை. கடைசியாக அவர் இயக்கிய படம் தான் 'பெரியம்மா'. இந்த படத்தில் தஞ்சம் புகுந்த இளம் காதலர்களுக்கு இரட்சகராகவும், ஆதரவு தருபவராகவும் பெரியம்மாவில் நடித்தார். இந்த படம் வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என்றாலும், பானுமதியின் படைப்பு என்ற தனி முத்திரை அவற்றில் தெரிந்தது. அதேபோல தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த 'செம்பருத்தி' படம் தான் அவரது கடைசிப் படமாகும்.
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005 அன்று காலமானார். இன்றும் சென்னை சாலிகிராமத்தில் பானுமதியின் ஸ்டூடியோ, பரணி என்ற அவர் மகன் பெயரில் இயங்கி வருகிறது. அது திருமண மண்டபமாகவும், சினிமா போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடக்கும் இடமாகவும் இருக்கிறது.