கருப்பட்டி: மனைவி கொலையை துப்பறியும் கணவனின் கதை
மோனிதா மூவிஸ் சார்பில் விஜயராஜ் தயாரித்து கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'கருப்பட்டி'. அவருடன் சமந்து, ஹரிணி, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கலைவாணி, ரஷீத், மைக்கேல் ராஜ், செண்பகவள்ளி ஆகியோர் நடிக்கின்றனர். காதல் பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள், கொலை தூரம் படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் இயக்கி உள்ளார். திவாகர் இசை அமைக்க செந்தில் மாறன் மற்றும் கவிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி தன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான். மணமுடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள்.
அவளை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் கருப்பட்டி ஈடுபடுகிறான். அப்பொழுது பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களில் அவனுக்கு மனைவியின் கொலையாளியை தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான். கொலையாளி யார் என்கிற திடுக்கிடும் முடிவு கிளைமாக்ஸ். வில்லேஜ் கிரைம் திரில்லராக உருவாகி வருகிறது'' என்றார்.