'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா?
தமிழில் சில படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும், சில இயக்குனர்கள் பேசப்படுகிறார்கள். அவர்களின் படைப்புகள் பல ஆண்டுகள் பேசப்படுகின்றன. இயக்குனர் சசி அப்படிப்பட்டவர். கடந்த 28 ஆண்டுகளில் இதுவரை 8 படங்களை மட்டுமே அவர் இயக்கியிருக்கிறார்.
லிவிங்ஸ்டன்,கவுசல்யா நடித்த 'சொல்லாமலே' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் சசி. காதல் படங்களில் சொல்லாமலே வித்தியாசமான கதை. தனது காதலிக்காக காதலன் நாக்கை அறுத்துக்கொள்ளும் கதை. அது சாத்தியமா என்ற யாரும் யோசிக்கவில்லை. இன்றுவரை சொல்லாமலே படத்தின் கிளைமாக்ஸ் பலரால் விரும்பி பார்க்கப்படுகிறது.
அடுத்து 'ரோஜாக்கூட்டம்' என்ற படத்தை இயக்கினார் சசி. அதில் ஸ்ரீகாந்த் அறிமுகம் ஆனார், பூமிகா ஹீரோயின். பாடல்களும், காதல் காட்சிகளும் படத்தை வெற்றி அடைய வைத்தன. சினிமா சண்டைக்கலைஞர்கள் பின்னணியில் 'டிஷ்யூம்' படத்தை இயக்கினார் சசி. அதில் ஜீவா, சந்தியா நடித்தனர். அந்த படமும் ஹிட்.
அடுத்து சசி இயக்கிய படங்களில் முக்கியமானது 'பூ'. தமிழ்செல்வன் எழுதிய 'வெயிலோடு போய்' என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டது. கிராமத்து மணம், அங்குள்ள மனிதர்கள், காதல் ஏமாற்றம், வலி என பல உணர்வுகளை நுட்பமாக சொன்னது. தமிழின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்னும் பூ புகழப்படுகிறது. அந்த படத்தில் நடித்த பார்வதிக்கு 'பூ' பார்வதி என்ற அடையாளம் இன்றும் இருக்கிறது.
அடுத்து விஜய் ஆண்டனியை வைத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்தார் சசி. அம்மா, மகன் பாசத்தை மாறுபட்ட வடிவில் சொன்ன அந்த படமும் ஹிட். மாமன், மச்சான் உறவை தமிழில் சொன்ன படங்கள் குறைவு. அதை அழகாக சொன்ன படம் சசியின் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. அதில் ஜி.வி.பிரகாஷ் அக்காவாக லிஜோமோல் ஜோஸ் அவர் கணவராக சித்தார்த் நடித்து இருப்பார்கள். பலரின் குடும்ப வாழ்க்கையை அந்த படம் நினைவுபடுத்தியது.
சசி இயக்கத்தில் பரத் நடித்த '555' படமும் வித்தியாசமானது. சமீபத்தல் சசி இயக்கிய 'நுாறுசாமி' படம், மறுமணத்தை அதுவும், திருமண வயதில் குழந்தைகள் இருந்தாலும், கணவன், மனைவியை இழந்தவர்களுக்கும் வாழ்க்கை உண்டு என்ற கருவை சொன்னது. கள்ளக்குறிச்சியில் நடந்த உண்மை சம்பவம் பின்னணியில் அந்த கதை உருவாகி பலரின் பாராட்டை பெற்றது. அவர் இயக்கிய 'நுாறு கோடி வானவில்' இன்னும் வெளியாகவில்லை.
சசி படங்களின் கதை மட்டுமல்ல, சசி இயக்கிய படங்களில் பாடல்களும் பிரபலமாகி இருக்கின்றன. பாபி (சொல்லாமலே), விஜய் ஆண்டனி (டிஷ்யூம்), குமரன் (பூ), சைமன்கிங் (555), பாலாஜி ஸ்ரீராம் (நுாறுசாமி), சித்துகுமார் (சிவப்பு மஞ்சள் பச்சை) ஆகிய 6 இசையமைப்பாளர்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பல நடிகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனர் சசிக்கு இன்று பிறந்தநாள்.