லண்டனில் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை துவக்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
லண்டன்: லண்டனில் நடைபெறும் பிரபல கார் பந்தயத்தை முதல்வர் விஜய் துவக்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தும் அவரது அணியினரும் பங்கேற்கின்றனர்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக முதல்முறையாக லண்டன் சென்று உள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தனது 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு 17ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் லண்டனில் நடக்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் பங்கேற்கிறார். அன்றைய போட்டியை பச்சை கொடியசைத்து முதல்வர் விஜய் துவக்கி வைக்க உள்ளதாக லீ மான்ஸ் கப் (Le Mans cup) நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'ஆட்டோமொபைல் கிளப் டி எல் ஓவெஸ்ட்' என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தக் கார்ப்பந்தமானது, சர்வதேச அளவில் பிரபலமானதாகும். இதில், மொத்தம் 44 அணிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரும், நடிகருமான அஜித்தும் இந்தப் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கு அஜித்தும் நன்றி தெரிவித்து இருந்தார். தற்போது, லண்டனில் நடக்கும் இந்தக் கார் பந்தயத்தை பார்வையிடும் அவர், அங்குள்ள சர்வதேச தரத்தினால் ஆன உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிடுகிறார். மேலும் இந்த ரேஸின் போது விஜய்யை அஜித் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.