பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே அதிரடி காட்டிய ஏ.பி.நாகராஜன்
பிற்காலத்தில் புராண படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி.நாகராஜன். ஆனால் ஆரம்ப காலத்தில் சமூக படங்களை இயக்கினார். இவரும் நடிகர் வி.கே.ராமசாமியும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்கள். இருவரும் இணைந்து தயாரிக்க ஏ.பி.நாகராஜன் இயக்குநராக அறிமுமான படம் 'வடிவுக்கு வளைகாப்பு'. இந்த படத்தில் நடித்தபோது சாவித்ரி நிஜமாகவே கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது சாவித்ரிக்கு அடிக்கடி உடல்நல பிரச்சினை ஏற்பட்டதால் அவர் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை சிவாஜி ஏற்கவில்லை. சாவித்ரி காட்சிகளை நீக்கி விட்டு சரோஜாதேவியை நடிக்க வைத்து படத்தை முடிக்கலாம் என்றார். இதனை வி.கே.ராமசாமி, நாகராஜனிடம் சொன்னபோது “படத்திற்கு நான்தான் இயக்குநர், தயாரிப்பாளர் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன்” என்று கூறிவிட்டார்.
அப்படியானால் இந்த இடைவெளியில் ஒரு படம் பண்ணலாம் என்றார் ராமசாமி, அதற்கு நீயே கதை எழுது என்றார் நாகராஜன். இந்த கோபத்தில் வி.கே.ராமசாமி எழுதிய கதைதான் 'பெரிய இடத்து சம்பந்தம்'. அந்த கதை எம்ஆர் ராதா, பிரேம் நசீர், சவுகார் ஜானகி நடிக்க படமானது. சாவித்ரி திரும்பி வந்ததும் 'வடிவுக்கு வளைகாப்பு' படப்பிடிப்பு நடந்து, அதுவே ஏ.பி.நாகராஜனின் முதல் படமாக வெளிவந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் பிரிந்தனர்.