இளையராஜா - அனிருத் இணையும் இசை நிகழ்ச்சி.. தயாரிப்பாளர் சங்க நலனுக்காக பிப்ரவரி 13ல் நடக்கிறது
சென்னையில் நடந்த 'கஸ்தூரி வீடு' என்ற பாடல் வெளியிட்டு விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் கமலக்கண்ணன் பேசியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பல நன்மைகளை சங்க உறுப்பினர்களுக்கு செய்து வருகிறது. ஹைதராபாத் பிலிம் சிட்டி மாதிரி சென்னை பூந்தமல்லியில் 150 ஏக்கரில் பிரமாண்ட பிலிம் சிட்டி அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த இடத்திலேயே படப்பிடிப்பு எடிட்டிங், டப்பிங் என அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதுபோல் சங்க சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அடுத்த மாதம் அரசு சார்பில் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மேலும் சங்க உறுப்பினர்களின் மருத்துவ உதவிக்கும் பல நன்மை செய்திருக்கிறது குறிப்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் இளையராஜா - அனிருத் இணைந்து நடத்தும் இசையால் இணைவோம் என்ற இசை கச்சேரியை பிரமாண்டமாக நடத்தி நிதி திரட்ட உள்ளோம். கடந்த நிர்வாகத்தில் பல விஷயங்கள் நடந்தன. அது பற்றி பேசாமல் நிதி, பண பற்றாக்குறை பற்றி அதிகம் விவாதிக்காமல் தயாரிப்பாளர் நலனுக்காக இந்த அணி செயல்படுகிறது தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் லைகா மற்றும் தனது சொந்த பிசினஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
ஆனாலும் தயாரிப்பாளர் நலனுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் படத்தை ஓட வைக்க விளம்பரம் செய்ய வேண்டும். ரசிகர்களும் செல்போனில் படம் பார்க்காமல் தியேட்டர் சென்று பார்க்க வேண்டும். தயாரிப்பாளர் சங்க உறுப்பினருக்காக சொந்தமாக சங்கம் சார்பில் ஓடிடி தொடங்க உள்ளோம். அதை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.