வினித் சீனிவாசன் படத்தில் காட்டியது போலவே நிஜமான நிவின் பாலியின் திரைப்பயணம்
மலையாள நடிகர் நிவின்பாலி அறிமுகமான காலம் தொட்டு பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி வரிசைக்கு உயர்ந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது படங்கள் சரியாகப் போகாத நிலையில் தொடர் சரிவை சந்தித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியான 'சர்வம் மாயா' மற்றும் இந்த ஓணம் பண்டிகைக்கு வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 100 கோடி மற்றும் 200 கோடிக்கு மேல் வசூலித்து அவரை மீண்டும் மலையாள திரையுலகில் நிலைநிறுத்தியுள்ளன.
அவரது இந்த வெற்றி குறித்து அவரது நண்பரும் காமெடி நடிகருமான அஜூ வர்கீஸ் கூறும்போது, ''கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் நிவின்பாலி நடித்தார். அதில் எப்படியாவது சினிமாவில் விட்ட இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்று துடிப்புடன் போராடும் நிதின் மோலி என்கிற சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த சமயத்தில், வினித் சீனிவாசன், நிவின்பாலி நிஜமாகவே இந்தப் போராட்டத்தைப் போல மீண்டும் தனது சினிமா வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என அப்போது கூறினார். அவர் கூறியது போலவே அந்தப் படம் வெளியாகி, அதற்கு அடுத்து வந்த இரண்டு படங்களில் மீண்டும் நிவின்பாலி தனது விட்ட இடத்தைப் பிடித்து விட்டார் என்பது ஆச்சரியம் தான்” என கூறியுள்ளார்.