இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது
இளையராஜா இசையில் மராத்தியில் வெளியான ‛கோந்தல்' திரைப்படம் 2027ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.
கடந்தாண்டு மராத்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கோந்தல்'. அறிமுக இயக்குனரான சந்தோஷ் திவாகர் இயக்கி இருந்தார். ‛சுமன்' என்ற கேரக்டரில் படத்தின் முதன்மை வேடத்தில் இஷிதா தேஷ்முக் நடித்தார். கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார்.
'கோந்தல்' என்ற பாரம்பரிய வழிபாட்டு நடனக் கலையின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. 'கோந்தல்' என்பது மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மற்றும் வழிபாட்டு முறை ஆகும். வசதியான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, அந்தத் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கும் 'சுமன்' என்ற இளம் மணப்பெண்ணைச் சுற்றி இந்த கதை சுழல்கிறது.
இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக 56-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான 'வெள்ளி மயில்' விருது வென்றது. இப்போது 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இப்படம் ஆஸ்கருக்கு செல்கிறது. மராத்தி சினிமாவின் வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் 4-வது திரைப்படம் இதுவாகும்.