பிளாஷ்பேக்: டி எஸ் பாலையாவிற்காக எம் ஜி ஆர் நடிக்க மறுத்த திரைப்படம்
தமிழ் திரையுலகில் எம் ஜி ஆரை வைத்து திரைப்படங்கள் இயக்காத பிரபல இயக்குனர்களில் குறிப்பிடும்படியானவர்கள் இயக்குனர் ஏ பீம்சிங்கும், இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனும். பெரும்பான்மையான இவ்விருவரின் திரைப்படங்கள் அழுத்தமான, உணர்வுப்பூர்வமிக்க, உறவுகளைச் சுற்றிச் சுழலும் குடும்பப் பின்னணி கொண்ட கதைகளை உள்ளடக்கியவையே.
அதனால் அதற்கேற்ற நடிகர்களையே தங்களது படங்களுக்கு தேர்வு செய்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இவ்விருவரில் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், தான் எடுக்க இருந்த ஒரு திரைப்படத்திற்கு எம் ஜி ஆரை நாயகனாக ஒப்பந்தம் செய்ய விரும்பி, எம் ஜி ஆரிடம் கதை சொல்ல, கதையைக் கேட்ட எம் ஜி ஆர், அந்தக் கதையில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் டி எஸ் பாலையாவை பயன்படுத்துமாறு இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் சொல்ல, அந்தக் கதாபாத்திரத்திற்கு நடிகர் எஸ் வி ரங்காராவை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும், அவர்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று பதிலளிக்க, நடிகர் டி எஸ் பாலையாவை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இருந்தால் இந்தப் படத்தில் நான் நடிக்கின்றேன்; இல்லை என்றால் நீங்கள் வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கூறி, அந்தப் படத்தை நிராகரித்தார் எம்ஜிஆர்.
அவ்வாறு எம் ஜி ஆர் நடிக்க மறுத்த அந்தத் திரைப்படத்தில் அவருக்குப் பதிலாக நடிகர் ஜெமினிகணேசனை நாயகனாக நடிக்க வைத்து, படத்தை இயக்கி முடித்தார் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷணன். அந்தத் திரைப்படம்தான் 1963ம் ஆண்டு வெளிவந்த “கற்பகம்”. நடிகை கே ஆர் விஜயா நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக காரணமாய் அமைந்த இத்திரைப்படம், மிகப் பெரிய வெற்றியை அப்போது பெற்றிருந்தது.
எம் ஜி ஆரும், டி எஸ் பாலையாவும் இரண்டு கதாநாயகர்களாக இணைந்து நடித்து, 1948ம் ஆண்டு 'ஜூபிடர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளிவந்த “மோகினி” திரைப்படத்தில் நாயகன் யார்? என்ற ஒரு பிரச்னை எழுந்தபோது, எம் ஜி ஆர் கதாநாயகனாக இருக்கட்டும் நான் துணை நாயகனாக இருக்கின்றேன் என நடிகர் டி எஸ் பாலையா அப்போது விட்டுக் கொடுத்திருந்ததை மனதில் வைத்து, அந்த நன்றிக்காக எம் ஜி ஆர் தனக்கு வந்த “கற்பகம்” திரைப்படத்தில் அவரையும் நடிக்க வைக்க முயற்சித்து, அது நடக்காமல் போக, அந்த வாய்ப்பையே எம் ஜி ஆர் நிராகரித்திருக்கின்றார். கலையுலகில் டி எஸ் பாலையாவிற்கும், எம் ஜி ஆருக்கும் இருந்த நட்பின் ஆழம் எத்தகையது என்பதை தெளிவாகக் காட்டும் ஓர் நிகழ்வாகத்தான் நம்மால் காண முடிகின்றது.