உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தேன் : அன்பில் அவன் பட விழாவில் அசோக் செல்வன் பேச்சு

வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தேன் : அன்பில் அவன் பட விழாவில் அசோக் செல்வன் பேச்சு

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, கார்த்திகேயன் இயக்க இந்த வாரம் வெளியாக உள்ள படம் அன்பில் அவன். இந்த பட விழாவில் பேசிய அசோக் செல்வன், ‛‛நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம்.

நான் இந்த விழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார். பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறி விடுவார்கள் .ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.

இயக்குனரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார்.

ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும். எனது மனைவி கீர்த்திக்கு நன்றிஎன்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !