நான் உண்மையை சொன்னால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும் : அம்பிகா பேட்டி
சென்னை : சொத்து பிரச்னையை தீர்க்க செக் தந்தது ராதா, அதை நிறுத்தியதும் அவர் தான். நான் உண்மையை சொன்னால் அவர் தான் சிறை செல்ல நேரிடும் என நடிகை அம்பிகா தெரிவித்தார்.
இதுபற்றி விளக்கம் அளித்த அம்பிகா, ‛‛ஏ.ஆர்.எஸ்., சொத்தில் 50 சென்ட் நிலம் பங்கில் மோசடி நடந்துள்ளது. ஏ.ஆர்.எஸ்., கார்டன் ஸ்டூடியோவில் மூன்றில் ஒரு பங்குரிமை உள்ளது. நிலம், தங்க நகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவரின் புகார் உண்மைக்கு புறம்பானது'' என கூறியிருந்தார்.
ராதா தான் சிறை செல்வார்
சென்னையில் இன்று(செப்., 23) செய்தியாளர்களை சந்தித்த அம்பிகா இதுபற்றி கூறுகையில், ‛‛ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான விஷயத்தில் தான் பிரச்னை. ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணமாக இருந்தது நான் தான். இதை எம்ஜிஆர் கொடுத்தார் என்பது தவறான தகவல். இது என் உழைப்பில் உருவானது. ஏஆர்எஸ் கார்டனில் சொத்தில் இருந்து என் பெயரை நீக்கிவிட்டனர். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே, நான் என்ன செத்தா போயவிட்டேன்.
தங்கம் என்றாலே என் சகோதரி ராதாவிற்கு ரொம்ப பிரியம். என் பெயரில் உள்ள தங்கத்தையும் அவர் தான் வைத்துள்ளார். சொத்து பிரச்னையை தீர்க்க செக் தந்தது ராதா தான். பின்னர் அதை நீக்கியதும் அவர் தான். செக் பவுன்ஸ் ஆனது, பணம் போனது எனக்கு. நான் தான் வழக்கு போட்டு இருக்கணும். நான் உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்ல நேரிடும். செக்கில் கையெழுத்து போட்டுவிட்டு என் வீட்டில் ஏன் அதை வைக்க வேண்டும். ஹேண்ட் பேக்கிற்கே லாக் போடும் ராதா இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்துவிட்டு போவாரா. அவுங்க பொண்ணு கல்யாணத்திற்கு நான் போய் இருந்தேன். எல்லா வேலைகளையும் நான் இழுத்து போட்டு வேலைக்காரி போல செய்திருக்கிறேன். ராதா தான் எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். ஆனால் என் மீது மோசடி புகார் அளித்தது வேதனை அளிக்கிறது.
அம்பிகா கண்ணீர்
தவறு செய்துவிட்டு முந்திக் கொள்வதை போல் ராதா செயல்படுகிறார். குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என எண்ணினேன், ஆனால் ராதா அவ்வாறு செயல்படவில்லை. எங்கள் அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க எண்ணினார். ஆகையால் சமரசம் செய்ய பேச நினைத்தால் பேசுவோம். என்னுடைய இன்ஸ்டாகிராமில் படிக்காதவன் படத்தில் வரும் பணம் காசக்கண்டுபுட்டா புலிக்கூட புல்லை தின்னும் என்னும் பாடலை ராதாவிற்கு தான் இன்ஸ்ட்டாகிராமில் வைத்தேன். திருடியதாக சொன்னதைதான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கண்கலங்கினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.