உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தி பாரடைஸ் : விமர்சனங்களுக்குப் பதிலளித்த நானி

தி பாரடைஸ் : விமர்சனங்களுக்குப் பதிலளித்த நானி

2026ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக தெலுங்குத் திரைப்படமான 'தி பாரடைஸ்' படம் இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 24ல் இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.

படத்தின் திரைக்கதை, வன்முறைக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றது. இதற்கு முன்பு இதே போன்றுதான் கடந்த மாதம் வெளியான பான் இந்தியா படமாக வெளியான கன்னடப் படமான 'டாக்சிக்' படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்று, பின்னர் படுதோல்வி அடைந்தது.

இப்படம் பற்றிய விமர்சனங்களுக்கு நானி அவரது எக்ஸ் தளத்தில், “உங்கள் எதிர்வினைகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் நான் கவனித்தேன். உங்கள் அன்பை முழுமையாகப் பெற்றதுடன், நீங்கள் செய்த நகைச்சுவையான கேலிகளையும் நான் ரசித்தேன். ரசிகர்கள் இப்படத்தைத் தங்கள் சொந்தப் படமாக ஏற்றுக்கொண்ட விதம் என் மனதை நெகிழவைத்தது. அதேவேளையில், விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறைகளிலிருந்தும் நான் கற்றுக்கொண்டேன்.

அனைத்திற்கும் நன்றி என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிப்பதற்காக, மிகுந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தி நாங்கள் 'தி பாரடைஸ்' படத்தை உருவாக்கியுள்ளோம். இதைக் கொண்டாடுவதோ அல்லது விமர்சிப்பதோ உங்கள் கைகளில்தான் உள்ளது.

இப்படத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆர்வத்திற்கும், என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

'தி பாரடைஸ்' படம் முதல் நாளில் 88 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். நானி நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படமாக இப்படம் புதிய சாதனை புரிந்துள்ளது. விமர்சனங்களை மீறி இரண்டாம் நாளிலும் குறிப்பிடத்தக்க வசூல் இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !