ஹிட் படம் கொடுத்தும் ஹீரோக்களுக்காக காத்திருந்த இயக்குனர்கள்
லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படப்பிடிப்பு நேற்று சிவகங்கையில் தொடங்கியது. இந்த படத்தில் வடிவேலு நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் வருகிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் இருக்கிறார். இந்த படத்தை நாகவம்சி தயாரிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 56வதுபடம்.
அதேபோல், 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கயாடு லோஹர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நேற்று தொடங்கியது. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 27வது படம். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுக்கும் இந்தநாள் ஸ்பெஷல். லப்பர் பந்து படம் பெரிய ஹிட், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் படத்தை கொண்டாடினார்கள். அந்த படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அடுத்த படத்தை இயக்கிய தமிழரசன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை. அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்திலேயே தனுஷிடம் கதை சொல்லி வாங்கிவிட்டாலும், தனுஷின் முந்தைய கமிட்மென்ட், கால்ஷீட் பிரச்னைகள் காரணமாக தமிழரசன் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை.
பார்க்கிங் படம் தேசிய விருது பெற்றது. அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்க இருந்தார் பாலகிருஷ்ணன். பல காரணங்களால் அந்த படம் டிராப் ஆக, பலகட்ட போராட்டங்களுக்குபின் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். அவர் தனது அடுத்த படத்தை இயக்க 34 மாதங்கள் ஆகிவிட்டது.
இதேபோல் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்ற ஹிட் படம் கொடுத்து, தேசிய விருதுகள் வாங்கிக் கொடுத்த நித்திலன் இன்னமும் படம் இயக்கவில்லை. தமிழில் பெரிய ஹிட் கொடுத்தாலும் அந்த இயக்குனர்களின் நிலை இப்படி உள்ளது. இங்கே பிரபல ஹீரோக்கள் திறமைசாலி இயக்குனர்களை கண்டு கொள்வதில்லை. காக்க வைக்கிறார்கள் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒரு பெரிய ஹிட் கொடுத்தும் அடுத்த படத்துக்காக இவ்வளவு காலம் காத்திருந்த இந்த இயக்குனர்களின் மனப்போராட்டம் ரொம்பவே கொடியது.