விமர்சனங்களை மீறி 136 கோடி வசூலித்த 'தி பாரடைஸ்'
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நானி, கயாடு லோஹர், மோகன் பாபு மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 24ல் வெளியான தெலுங்குப் படம் 'தி பாரடைஸ்'. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் டப்பிங் ஆகி வெளியானது.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும், டிரோல்களும்தான் வெளியான நாளிலிருந்து அதிகமாக வந்தது. ஆனால், அதை மீறி படத்தின் வசூல் இருப்பதாக தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாளில் இப்படம் 136 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இப்படம் முதல் நாளில் 88 கோடியும், இரண்டாவது நாளில் 114 கோடியும் வசூலித்ததாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
அதோடு, ஆன்லைன் டிக்கெட் இணையதளங்களில் இதுவரையில் 33 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் 2 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை நெருங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.