உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டோரதி' படத்தை புறக்கணிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்

'டோரதி' படத்தை புறக்கணிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் வேண்டுகோள்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் 'டோரதி'. படத்திற்கு சிலர் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். காரணம், படத்தில் உயிர் நண்பன், திருநங்கை ஆவது போலவும், நட்பு, காதலால், அவரை நண்பன் ஏற்றுக்கொள்வது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் எல்.ஜி.பி.டி.க்யு (LGBTQ), வானவில், ஹாப்பி ஸ்ட்ரீட் எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் கட்டற்ற பாலியல் சுதந்திர ஆதரவு இயக்கத்தை திராவிட மாடல் நக்சல் கம்யூனிச அமைப்புகள் வளர்த்து வருகின்றன.

தமிழர் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், குடும்ப அமைப்பு முறை, உறவுகள், சொந்த பந்தங்கள் ஆகியவற்றை அழித்து ஒழித்து மனிதர்களை மிருக நிலைக்கு மாற்றும் இந்த கருத்துக்கள் திட்டமிட்டு தமிழகத்தில் திணிக்கப்படுகின்றன.

ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட கிறிஸ்தவ நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் கட்டற்ற பாலியல் சுதந்திர ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களுக்கும் இயக்கங்கள் உள்ளன. அவர்கள் வெளிநாட்டு நிதி உதவியுடன் தமிழகத்திலும் இந்த கலாசாரத்தை பரப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் துணை முதல்வர் உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி, எல் ஜி பி டி க்யூ இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தி வானவில் பேரணியை துவக்கி வைத்தார். திராவிட மாடல் கட்சிகள் மற்றும் கம்யூனிச அமைப்புக்கள் விடுதலை சிறுத்தைகள் கிறிஸ்தவ என்.ஜி.ஓ.,கள் இந்த இயக்கங்களை தமிழகத்தில் வளர்த்து வருகிறார்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள இவர்களின் பிரச்னையை இதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். திருநங்கைகள், திருநம்பிகள் பாரத பண்பாட்டில் என்றும் எப்போதும் மதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சமுதாயத்தின் உயர்ந்த இடங்களில் பதவிகளில் இப்பொழுதும் இருக்கிறார்கள். இவர்களுக்கான ஆதரவு நமது பாரதப் பண்பாட்டில் எப்பொழுதும் உண்டு.

ஆனால் மூன்றாம் பாலினத்தவரின் முகமூடி போட்டுக் கொண்டு ஓரினச்சேர்க்கையாளர்களும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை விரும்பும் காம வெறியர்களும் குடும்ப அமைப்பை சிதைப்பவர்களும் ஒரு அமைப்பாக திரண்டு தமிழக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு யாரும் துணை போகக்கூடாது.

டோரதி எனும் திரைப்படம் முழுக்க முழுக்க முறையற்ற பாலுறவு மற்றும் ஓரின ச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களையும் எதிர்கால சமுதாயத்தையும் தவறாக வழிநடத்தும் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது டோரதி திரைப்படம் இளையராஜாவின் அற்புதமான இசை மற்றும் பாடல்கள், சிறந்த சினிமா தொழில்நுட்ப திரை கலைஞர்களின் பங்களிப்பு, பிரபல திரைப்பட நடிகை, நடிகர்களின் உழைப்பு ஆகியவை எதிர்கால இளைஞர் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடக்கூடாது.

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டுகிறோம். கார்த்திக் சுப்பராஜூக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !