பிளாஷ்பேக் : கதை குழப்பத்தில் தோல்வி அடைந்த சிவாஜி படம்
எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவர். தனது புகழ்பெற்ற பக்ஷிராஜா பிலிம்ஸ் சார்பில் அவர் தயாரித்து இயக்கிய படம் 'கல்யாணியின் கணவன்' . அதில் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜா தேவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்கராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஓ.ஏ.கே.தேவர், ஏ.கருணாநிதி, எஸ்.ராமராவ், கே.வி.சீனிவாசன், டி.பி.முத்துலட்சுமி, சீதாலட்சுமி, ராதிகா, சாந்தாதேவி ஆகியோரும் நடித்திருந்தனர்.
கதையையும் வசனங்களையும் எழுத்தாளரான வேலவன் எழுத, திரைக்கதையை ஸ்ரீராமுலு நாயுடு எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுத, இசையை எஸ்.எம். சுப்பையா நாயுடு அமைத்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் கோயம்புத்தூரில் உள்ள பக்ஷிராஜா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது.
கதாநாயகி கல்யாணி (சரோஜா தேவி) தனது தோழிகளுடன் ஆற்றில் நீந்தச் செல்லும்போது, அவரை ஆற்று வெள்ளம் அடித்துச் செல்கிறது. துணிச்சலான இளைஞரான கதிரேசன் (சிவாஜி கணேசன்) அவரை காப்பாற்றுகிறான். இந்த உதவி அவர்கள் இருவரையும் காதலிக்க வைக்கிறது.
கல்யாணியின் தந்தை (ரங்கா ராவ்), சிவாஜியின் தைரியத்தைக் கண்டு வியந்து, அவர்களுக்கு ஒரு நல்ல நாளில் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வில்லன் எம்.ஆர்.ராதா ஒரு பேய் கதையை அரங்கேற்றி, சிவாஜியின் மனதை மாற்றி திருமணத்தை நிறுத்துகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.
பிரமாண்டமான நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டிருந்த போதிலும், 'கல்யாணியின் கணவன்' வெற்றி பெறவில்லை. அழகான காதல் கதையில் கதைக்கு தொடர்பில்லாத விஷயங்களை சேர்த்ததால் திரைக்கதை சொதப்பலாகி அதுவே தோல்விக்கு காரணமானது.