உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலுக்கு நன்றி, சூர்யாவுக்கு பாராட்டு: சென்னையை நினைவு கூர்ந்த ராஜமவுலி

கமலுக்கு நன்றி, சூர்யாவுக்கு பாராட்டு: சென்னையை நினைவு கூர்ந்த ராஜமவுலி

'பாகுபலி, நான் ஈ, ஆர்ஆர்ஆர்' படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிக்கும் படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'. ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கிறார். அக்டோபர் 2ல் படம் ரிலீஸ். சென்னையில் நேற்று நடந்த இந்த பட நிகழ்ச்சியில் ராஜமவுலி, அவர் மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, சிறப்பு விருந்தினராக சூர்யா, ஹீரோ பஹத் பாசில் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ராஜமவுலி தனது சென்னை நினைவுகள் குறித்து பேசினார்.

ராஜமவுலி பேசியதாவது: 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. 'சிங்கம்' படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்திய உங்களிடமிருந்து, 'சீன்' படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம். நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகள்.

ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டடக் கலை நிபுணர் சொன்னார்... 'நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டடம்' என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குனர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

இயக்குனர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்.... அது எனக்குப் பிடித்திருந்தால்... நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன். அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.

'ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை.._ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

பஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜோஷி', 'ட்ரான்ஸ்', என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.

மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல்... இசை இல்லாமல்... பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.

படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும்.. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டி இருந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும்... ஒவ்வொரு உரையாடலுக்கும்... ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும்.... சூரிக்கு, திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.

இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த 'உலகநாயகன்' கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி,'' என்றார். மேலும் அவர் சென்னை நினைவுகள் பற்றி பேசும்போது ''நான் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லுாரி பஸ் ஸ்டாப்பில் ஓடிப்போய் பஸ் பிடிப்பேன், அதை மறக்க முடியாது. சென்னையின் சாட் ஐயிட்டம், இட்லி, தோசை, ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும். இங்குதான் சினிமா ஏபிசிடி கற்றுக்கொண்டேன்' என்றார். அவர் இயக்கும் வாரணாசி பற்றி கேட்டபோது அது பற்றி பேசினால் இந்த படத்தை மறந்துவிடுவார்கள். இப்போதைக்கு வேணாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !