உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

3 தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்த தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் (75) கோவாவில் காலமானார். இன்று அதிகாலை கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது இல்லத்தில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் சுமார் 45 நிமிடங்கள் அவருக்கு தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்திய திரையுலகின் சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத்-ஜன்ஜிரா எனும் ஊரில் ஜனவரி 1, 1951ல் பிறந்தார். இவரது நிஜ பெயர் விஸ்வநாத் படேகர். 1978ல் வெளியான 'கமன்' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 10 ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் 1988ல் வெளியான 'சலாம் பாம்பே' இவருக்கு திரை வாழ்வில் திருப்புமுனையை தந்தது. இந்தப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. 48 ஆண்டு திரை வாழ்வில் ஹிந்தி மட்டுமல்லாது மராட்டி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நானே படேகர்.

நடிப்பில் தனித்துவம்
பெரும்பாலும் வணிகம் சார்ந்த கமர்ஷியல் படங்களில் நடிப்பதை விட வலுவான, தனித்துவமான வேடங்களில் மட்டுமே நடித்தார். வருகிற எல்லா பட வாய்ப்புகளையும் ஏற்காமல் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து தனி முத்திரையை பதித்துள்ளார்.

இயக்கம், தயாரிப்பு
நடிப்பு மட்டுமின்றி, பிரஹார், வத் என்ற 2 படங்களை இயக்கியும் உள்ளார். இரண்டு படங்களை தயாரித்தும், ஓரிரு பாடல்களையும் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்
பாரதிராஜாவின் ‛பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் முத்திரை பதித்த இவர் ரஜினியின் ‛காலா' படத்தில் ஹரிதாதா என்ற வேடத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.

சமூக சேகவர்
நானா படேகர் தனது எளிமையான வாழ்க்கை முறைக்கும், சமூக சேவைக்கும் பெயர் பெற்றவர். பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கினார்.

விவசாயிகளுக்கு உதவி
2015ல், மராட்டிய நடிகர் மகரந்த் அனாஸ்புரே உடன் இணைந்து நாம் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

வறட்சியால் ஏற்பட்ட கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்தார். 2015ல் விதர்பா பகுதியைச் சேர்ந்த 62 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 வீதம் காசோலைகளை வழங்கினார். அதேஆண்டு செப்டம்பரில் மராத்வாடாவின் லாத்தூர் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 113 விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார்.

பாட்ஷாலா திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார்.

3 தேசிய விருதுகள்
1. 1989ல் பரிந்தா என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது.
2. 1994ல் கிராந்திவீர் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது.
3. 1996ல் அக்னி சாக்ஷி என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது.

பத்மஸ்ரீ விருது
திரைத்துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இந்திய அரசு 2013ம் ஆண்டு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.

குடும்பம்
நாடகத் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால் நீலகண்டி என்ற கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காதலானது. இருவரும் 1978ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு துர்வாசா, மல்ஹார் என்ற இரு மகன்கள். இவர்களில் துர்வாசா உடல்நலப் பிரச்னையால் 2 வயதிலேயே காலமானார். இந்த இழப்பு நானா படேகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்கிறார் நானா படேகர்.

நானே படேகரின் திடீர் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பே. அவரது மறைவுக்கு பிரதமர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !