உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: விகாரமான தோற்றத்தில் நடித்த கல்யாண் குமார்

பிளாஷ்பேக்: விகாரமான தோற்றத்தில் நடித்த கல்யாண் குமார்


கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த கல்யாண் குமார் தமிழில் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து இங்கும் புகழ்பெற்றிருந்தார். கதாநாயகன் என்றால் அழகாக இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய 1960களில் விகாரமான தோற்றத்தில் துணிச்சலாக நடித்தவர் சிவாஜி. அவரைப்போன்றே கன்னடத்தில் கல்யாண் குமார் பல படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த படம், 'மணி ஓசை'.

இந்த படத்தில் கல்யாண் குமாருடன் எம்.ஆர்.ராதா, சித்தூர் வி.நாகையா, சி.ஆர்.விஜயகுமாரி, குமாரி ருக்மணி, முத்துராமன், நாகேஷ், புஷ்பலதா, எம். எஸ். எஸ். பாக்யம், புஷ்பமாலா, விஜயன், 'கரிக்கோல்' ராஜூ மற்றும் 'பேபி' சந்திரகலா ஆகியோர் நடித்திருந்தனர். 'ஏஎல்எஸ்' என்று பரவலாக அறியப்பட்ட ஏ.எல்.சீனிவாசன் தயாரித்தார். பின்னாளில் சிவாஜி நடிப்பில் பல வெற்றிப் படங்களை கொடுத்த பி.மாதவன் இயக்கிய முதல் படம் இது. புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோவின் 'தி ஹஞ்ச்பேக் ஆப் நோட்ரே டேம்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அகங்காரம் பிடித்த ஒரு பணக்காரர் (எம்.ஆர்.ராதா). அவரின் மூத்த மகன் கல்யாண்குமார். பிறக்கும்போதே கூன் விழுந்த உடலும், முதுகில் பெரிய சதை மேடும் உள்ள விகாரமான தோற்றமும் கொண்டவராக இருந்தார். அதாவது பேரழகன் படத்தில் சூர்யா நடித்த கேரக்டர் மாதிரி. இந்த உடல் குறைபாட்டைக் கண்டு அவனைத் துறந்துவிட்டு, அக்குழந்தை இறந்தே பிறந்ததாகத் தன் மனைவியிடம் (குமாரி ருக்மணி) பொய் கூறுகிறார் எம்.ஆர்.ராதா. தன்னை விரட்டிய குடும்பத்திற்கு கல்யாண் குமார் எவ்வளவு பெரிய தியாகங்களை செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சிறப்பான பாடல்கள், சிறப்பான நடிப்பு மற்றும் நேர்த்தியான இயக்கம் இருந்தபோதிலும், இப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. இதற்குக் காரணம் கதாநாயகன் விகாரமான தோற்றம் கொண்டவராக இருந்ததுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !