உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தவறான வழிகாட்டுதலால் வாய்ப்புகளை இழந்த மோகினி

பிளாஷ்பேக்: தவறான வழிகாட்டுதலால் வாய்ப்புகளை இழந்த மோகினி


'ஈரமான ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமானார் மோகினி. பெயருக்கு ஏற்ற மாதிரி அவரது தோற்றமும் இருந்தது. தஞ்சாவூரை சேர்ந்த அவரது இயற்பெயர் மகாலட்சுமி. தயாரிப்பாளராக இருந்து இயக்குனரான கேயார்தான் அவருக்கு மோகினி என்று பெயர் வைத்தார். அவரது நடனத் திறமை, பல பாடல்களில் அவருக்குக் கை கொடுத்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்தார். குறிப்பாக நான் பேச நினைப்பதெல்லாம், பிரஷாந்துடன் 'கண்மணி, சின்ன மருமகள், ஜமீன் கோட்டை, குற்றப்பத்திரிக்கை' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை. ஆனாலும் மோகினி சில காலமே சினிமாவில் நீடித்தார். இதற்கு காரணம் அவரை தவறாக வழி நடத்தியவர்கள். பெரிய பெரிய வாய்ப்புகள் வந்தபோது அதை தவிர்த்து அவரை சிறிய படங்களிலேயே நடிக்க வைத்தனர்.

'ஈரமான ரோஜா' படம் முடிந்த உடனே அவருக்கு வந்த வாய்ப்பு 'சின்னத்தம்பி'. அவருக்காக 10 நாட்கள் படக்குழு காத்திருந்தது. அப்போது அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் 'ஈரமான ரோஜா' வெளிவரட்டும் அது மிகப்பெரிய வெற்றி பெறும் அதன் பிறகு பெரிய சம்பளத்துடன் அடுத்த படத்தில் நடிக்கலாம் என்றனர். இதனால் அந்த படத்தை தவறவிட்டார் மோகினி. பின்னர் குஷ்பு நடித்தார்.

'வாரணம் ஆயிரம்' படத்தில் சிம்ரன் நடிக்க வேண்டிய கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தது மோகினிதான். அது சின்ன கேரக்டர் வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள் வழிகாட்டியவர்கள். மோகினியின் கண்கள் மற்றும் தோற்றத்தால் கவரப்பட்ட மணிரத்னம் அவரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். 'திருடா திருடா' படத்தில் ஹீரா நடித்த கேரக்டரில் மோகினிதான் நடிப்பதாக இருந்தது. 'தளபதி' படத்தில் பானுபிரியா நடித்த கேரக்டரிலும் மோகினிதான் நடிப்பதாக இருந்தது. இரண்டு முக்கியமான படத்திலும் அவர் நடிக்கவில்லை.

பின்னர் சினிமா வாய்ப்புகள் நின்று போனதும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !