50வது படத்திற்கு இளையராஜா இசை : ராமராஜனின் ஆசை
திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசையமைப்பாளர் இளையராஜாவும், நடிகர் ராமராஜனும் இணையும் புதிய திரைப்படத்திற்கு 'கடவுள் தந்த பரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளனர். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் 25வது படமாகும்.
புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள். பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராமராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் கூறியதாவது, ‛‛மக்கள் ரசிக்கும் கதைகளையே எப்போதும் கொடுக்க விரும்புகிறேன். மதுரையில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்த நான் இன்று இந்தளவுக்கு வர முக்கியமானவர்களில் இளையராஜாவும் ஒருவர். அவர் தந்த பாடல்களால் தான் பிரபலமானேன். எனது 50வது படத்தை நானே இயக்கவும், அதற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்'' என்கிறார்.