பிளாஷ்பேக் : ஆந்திர எம்ஜிஆரை தெரியுமா?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த என்.டி.ராமராவுக்கு கடும் போட்டியாளராக களத்தில் இருந்தவர் காந்தாராவ். தமிழ் ரசிகர்களுக்கு காந்தாராவ் என்ற பெயரை கேட்டாலே அவர் நடித்த மாயாஜால படங்கள்தான் நினைவுக்கு வரும். காரணம் அவரது தெலுங்கு படங்கள் தெலுங்கில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. விட்டலாச்சார்யாவின் ஆஸ்தான நடிகராகவும் இருந்தார்.
எம்ஜிஆர் போன்று வாள் சண்டையில் இவர் பிரபலமானதால் இவரை 'ஆந்திரா எம்ஜிஆர்' என்று அழைத்தார்கள். 'கத்துல காந்தாராவ்' என்று இன்னொரு பட்டப்பெயரும் உண்டு. 'கத்துல' என்றால் 'வாள்வீரன்' என்று பொருள். காந்தாராவ் நடித்த நேரடி தமிழ் படம் 'மந்திரி குமாரன்'. இந்த படத்தையும் விட்டாலாச்சார்யாதான் இயக்கினார். காந்தாராவ் ஜோடியாக ராஜஸ்ரீ, அனுராதா நடித்தனர். இந்த படமும் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தெலுங்கில் 'மதன காம ராஜுலு கதா' என்ற பெயரில் வெளியானது.