பேசி மயக்கும் கலை அறிந்தவர் : 'பிக்பாஸ்' முத்துகுமரன் மீது பாடலாசிரியர் தாமரை கடும் தாக்கு
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த முத்துக்குமரன், பிக்பாஸ் 8வது சீசனில் டைட்டில் வென்றதன் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் அவர் மீது வஹிதா அக்தர் என்ற பெண் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல பாடலாசிரியர் தாமரை முத்துகுமார் பற்றி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 'பேசியே பெண்களை மயக்கும் வித்தகன்' முத்துகுமார் என்று அவர் கூறியுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது...
அடேய் முத்துக்குமரா... இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா? இதோ வெளிவந்து விட்டது உன் குட்டு. இது இந்தப் பயல் முத்துக்குமரனைப் பற்றியது மட்டுமல்ல... பேசி மயக்கும், எழுதி மயக்கும் அனைத்துக் கில்லாடி அயோக்கியர்களுக்குமானதுதான். ஆண், பெண் இரண்டு பாலருமே இந்தக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். நன்றாகப் பேசி, ஊடகங்களில் கொஞ்சம் பெருவலம் அடைந்ததுமே ஆரம்பித்து விடுகிறார்கள். சொல்லப் போனால் பார்வையெல்லாம் 'யாரை வலையில் சிக்க வைப்பது?' என்பதுதான். அதற்கு இந்த மயக்கும் பேச்சுக்கலை போல் வேறேதும் உண்டா?
பேசுவது எல்லாம் உலக வீச்சில் இருக்கும், பூமியையே புரட்டிப் போட்டுவிடும் பேச்சு... தன்போன்ற நேர்மையாளன், செயல்வீரன், தியாகி, பசிநோக்கான், கண்துஞ்சான், லட்சியவாதி எவருமே இல்லை என்று இரையை நம்பவைக்கும் அந்தப் பேச்சும் உடல்மொழியும்... அடடா அடடா... இரை எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் சிலபேர் அதைத் தாண்டிய விற்பன்னர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் அடிப்படையில் ஒரு தூண்டில் இருக்கிறது, ஏதாவது சித்தாந்தம், கருத்தாக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாக அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
முத்துக்குமரனைப் பற்றி இந்தப்பெண் துணிச்சலாகச் சொல்லியிருப்பது வியப்பு. ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம், இனி சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?. பொறுத்திருந்து பார்ப்போம்.
அடேய் முத்துக்குமரா... வாடா வா... இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பாயல்லவா... அப்போது அந்தத் 'தமிழ்நாக்கு' எப்படி சுழல்கிறது என்று பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.