உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி படத்துக்கு முன்னால் என் படம் ஒரு சிறு புள்ளி : சித்தி இட்னானி

ரஜினி படத்துக்கு முன்னால் என் படம் ஒரு சிறு புள்ளி : சித்தி இட்னானி

எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. ஆர்.ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சித்தி இட்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம், ஹாரர், பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை தொடர்ந்து முன் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வினில் நாயகி, சித்தி இட்னானி பேசியதாவது : உங்கள் மனதில் ஒரு கேள்வி இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்த் சாரின் படத்துடன், எங்களுடைய சிறிய படத்தை ஏன் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், உண்மையில் தலைவரின் படத்துடன் எங்களுடைய படமும் வெளியாவது எங்களுக்குப் பெருமையும் கவுரவமும் அளிக்கிறது.

அவருடைய படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் தலைவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் தமிழ்நாட்டைத் தாண்டி, நாட்டின் எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது. 'டிரோன்ஸ்' படக்குழுவினர் அனைவரும் தலைவரின் 'ஜெயிலர்' திரைப்படத்தைக் காணவும், அவருடைய வெற்றியைக் கொண்டாடவும் ஆவலுடன் இருக்கிறோம்.

அதேநேரத்தில், இது நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த காலம். குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய சிறிய, சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக 'டிரோன்ஸ்' இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன். எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்த நவராத்திரியில் நான் கடவுளிடம் வேண்டிக்கொண்ட ஒரே விஷயம், அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !